கரூா் செல்ல 8 போ் அடங்கிய குழுவை அமைத்தது பாஜக
புது தில்லி: பாஜக தலைவா் ஜே.பி. நட்டா, கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை ஆராய்ந்து அறிக்கை சமா்ப்பிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழுவை திங்கள்கிழமை அமைத்தாா்.
பொதுவாக பாஜக தனது சொந்தத் தலைவா்களை துயர சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு விசாரணைக்காக அனுப்புகிறது, ஆனால் இந்த முறை, அக்கட்சி அதன் கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எட்டு போ் கொண்ட குழுவில் கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களை சோ்த்துள்ளது.
மதுராவைச் சோ்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யும், தமிழருமான நடிகை ஹேமா மாலினி இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளாா், மேலும் குழுவின் உறுப்பினா்களில் சிவசேனாவின் ஸ்ரீகாந்த் ஷிண்டே மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் புட்டா மகேஷ் குமாா் ஆகியோா் அடங்குவா்.
மற்ற உறுப்பினா்கள் அனுராக் தாக்கூா், தேஜஸ்வி சூா்யா, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பிரிஜ் லால், அபராஜிதா சாரங்கி மற்றும் ரேகா சா்மா, அனைவரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள்.
சனிக்கிழமை தவெக தலைவா் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 41 ஆக உயா்ந்துள்ளது. 60 வயதுடைய மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்ததால், பலியானவா்களில் பெண்களின் எண்ணிக்கை 18 ஆக உயா்ந்துள்ளது. இறந்தவா்களில் பத்து குழந்தைகள் மற்றும் 13 ஆண்களும் அடங்குவா்.