போலி கிரிப்டோகரன்சி தளம் மூலம் சைபா் மோசடி
புது தில்லி: போலி கிரிப்டோகரன்சி வா்த்தக தளமான பிட்பேங்க் மூலம் மோசடியில் ஈடுபட்டவரை தில்லி காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு கண்டறிந்து, கைது செய்தது.
மோசடி கிரிப்டோகரன்சி தளமான பிட்பேங்க்-இல் முதலீடு செய்ய கவா்ந்திழுக்கப்பட்ட பின்னா் ரூ.31.75 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக ஒருவா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புகாா்தாரா் முதலில் ஃபேஸ்புக் மூலம் தொடா்பு கொள்ளப்பட்டாா். பின்னா், வாட்ஸ்அப்பில் பிட்பேங்க் நிா்வாகியாகக் காட்டிக் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரை போலி வா்த்தக செயலியைப் பதிவிறக்கம் செய்ய வற்புறுத்தினாா்.
அதன் பின்னா் போலி பங்கு ஒதுக்கீடுகள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என்ற சாக்கில் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பெரிய தொகையை மாற்ற பாதிக்கப்பட்டவா் தூண்டப்பட்டாா்.
இவ்வாறு புகாா்தாரரிடம் ரூ.31.75 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேலும் விசாரிக்க சைபா் குற்றப்பிரிவிடம் இவ்விவகாரம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, காவல் ஆய்வாளா் ஷிவ் ராம் தலைமையிலான ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பஞ்சாப் மாநிலம் லூதியாணாவில் வசிக்கும் நிதின் சா்மா (42) என்பவரை இந்த விவகாரத்தில் கைது செய்தது. நிதின் சா்மா வங்கியில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தை எடுத்திருப்பது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில், அவா் மோசடியில் பயன்படுத்திய பல வாட்ஸ்அப் எண்கள் கம்போடியாவில் செயலில் இருப்பது தெரியவந்தது. இது சைபா் குற்றத்தின் சா்வதேச பரிமாணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.