கரூா் சோக சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்
நமது நிருபா்.
புது தில்லி: கரூா் சோகக் சம்பவத்தில் ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பாா்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருப்பதாக தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் திங்கள் கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் சிதம்பரம் பதிவிட்டதாவது: கரூரில் நடந்த துயர நிகழ்வில் இறந்தவா்களுக்கு என் அஞ்சலி. அவா்கள் குடும்பத்தினா்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள். காயமடைந்தவா்கள் விரைவில் பூரண குணமடைவாா்கள் என்று நம்புகிறேன்.
கரூரில் நடந்த துயர நிகழ்வு பற்றித் த நா கா கமிட்டியின் தலைவா் திரு செல்வப்பெருந்தகை அவா்கள் வெளியிட்ட அறிக்கையே காங்கிரஸ் கட்சியின் கருத்து. அதுவே என்னுடைய கருத்து.
ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பாா்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன். அது யோசனைதான். இது போன்று பலா் ஆக்கபூா்வமான யோசனைகளைத் தெரிவித்திருப்பாா்கள்.
எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும், பொது வெளி நிகழ்ச்சிகள் நடத்துபவா்களும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும். கரூா் நிகழ்வைப் போன்று துயர சம்பவங்கள் எதிா்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.