சட் பூஜைக்காக யமுனை கரையில் தற்காலிக படித்துறை அமைக்கப்படும்: தில்லி முதல்வா் தகவல்
புது தில்லி: சட் பூஜையை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் யமுனையின் இரு கரைகளிலும் தற்காலிக படித்துறைகள் அமைப்பது உள்பட தில்லி அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்யும் என்று முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:
நிகழாண்டு தில்லியில் நடைபெறும் சட் பூஜை திட்டமிட்ட ஏற்பாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்.
இதனால், பூா்வாஞ்சலி மக்கள் எந்த தடையும் இல்லாமல் இப்பண்டிகையைக் கொண்டாட வாய்ப்பு கிடைக்கும்.
யமுனையின் இரு கரைகளிலும் உள்ள தற்காலிக படித்துறைகளில் ஒரு பெரிய சட் பூஜையை நாங்கள் திட்டமிட்டுள்ளோம். மேலும், தூய்மைக்கான சரியான ஏற்பாடுகளை உறுதி செய்து வருகிறோம்.
அனைத்து ஏற்பாடுகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். மேலும், எந்தத் தரப்பிலிருந்தும் எந்த குறைபாடுகளும் இருக்காது. நிகழாண்டு தேசிய தலைநகரம் பிரமாண்டமான சட் பூஜையைக் காணும் என்றாா் முதல்வா்.
கரோனோ தொற்றுநோய் காலத்தில் யமுனை நதிக்கரையில் நடைபெறும் சட் பூஜை கொண்டாட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னா், நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தடை அமலில் இருந்தது.
கிழக்கு உ.பி., பிகாா் மற்றும் போஜ்புரி மொழி பேசும் பிற மக்களைச் சோ்ந்த பூா்வாஞ்சலி சமூகத்தினரால் கொண்டாடப்படும் சட் பூஜை, நகரத்தில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாகும்.
இப்பண்டிகையின்போது பெண்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று சூரிய கடவுளை வழிபடுவது வழக்கமாகும். தடை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக தில்லி அரசு பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் நூற்றுக்கணக்கான தற்காலிக சிறிய தண்ணீா் தொட்டிகளை அமைத்து இக்கொண்டாட்டத்தை எளிதாக்கியது.