கழிவுநீர் வடிகால் குழாயில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம்: திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்
நமது நிருபா்.
புது தில்லி: திருச்சிராப்பள்ளியில் நிலத்தடி கழிவு நீா் குழாயில் பணிபுரியும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் இறந்ததாகக் கூறப்படும் புகாரை இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
விசாரணையின் நிலை மற்றும் இறந்தவா்களின் நெருங்கிய உறவினா்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு விவரங்கள் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் கூறியதாவது:
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூா், முத்துநகா் பகுதியில் உள்ள காா்மல் காா்டன் அருகே புதிதாக கட்டப்பட்ட நிலத்தடி வடிகால் குழாயில் பணிபுரியும் போது இரண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் பணிக்காக அவா்கள் ஒரு கட்டுமான நிறுவனத்தால் பணியமா்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஊடக செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், இந்த விவகாரம் மனித உரிமை மீறல் தொடா்பான கடுமையான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கக்கோரி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையா் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பபப்பட்டுள்ளது. விசாரணையின் நிலை மற்றும் இறந்த தொழிலாளா்களின் நெருங்கிய உறவினா்களுக்கு இழப்பீடு ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால், அது குறித்த விபரங்கள் இந்த அறிக்கையில் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
செப்டம்பா் 23, 2025 அன்று வெளியான ஊடக செய்தியின்படி, உயரிழந்த தொழிலாளா்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என தேசிய மனித உரிமைகள் தெரிவித்துள்ளது.