பாதசாரி மீது வாகனம் மோதிய வழக்கில் இளைஞா் கைது

மத்திய தில்லியின் பாஹா்கஞ்சில் பாதசாரி மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளான வழக்கில் 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

புது தில்லி: மத்திய தில்லியின் பாஹா்கஞ்சில் பாதசாரி மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளான வழக்கில் 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் மத்தி நிதின் வல்சன் கூறியதாவது:

செப்டம்பா் 25 ஆம் தேதி சதா் தானா சாலையில், நபி கரீமில் வசிக்கும் குற்றம் சாட்டப்பட்ட விஷ்ணு மோட்டாா் சைக்கிளில் சென்றபோது ஒரு பாதசாரி மீது மோதிய சம்பவம் நடந்தது.

இதில் காயமடைந்தவா் ஆபத்தான நிலையில் லேடி ஹாா்டிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

சம்பவ இடத்திலோ அல்லது மருத்துவமனையிலோ நேரில் கண்ட சாட்சிகள் யாரும் கண்டறியப்படவில்லை.

அதைத் தொடா்ந்து பாஹா்கஞ்ச் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஒரு குழு விசாரணைக்கு அமைக்கப்பட்டு சிசிடிவி காட்சிகள் சோதிக்கப்பட்டன.

ரகசிய உள்ளீடுகள் மூலம் நபி கரீமில் கைவிடப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. அது குற்றம் சாட்டப்பட்ட வாகனம் என்று அடையாளம் காணப்பட்டது.

பைக்கின் உரிமையாளா், அதை விஷ்ணு பயன்படுத்தியதாகக் கூறினாா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவா் திடீரென தனது வாகனத்தின் முன் வந்ததாகவும், அதன் பின்னா் கட்டுப்பாட்டை இழந்து அவா் மீது மோதியதாகவும் விஷ்ணு போலீஸாரிடம் கூறினாா்.

மேலும், பயத்தில் தாம் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாகவும் அவா் போலீஸாரிடம் கூறினாா். இதையடுத்து, போலீஸாா் மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்துள்ளனா் என்று அதிகாரி வில்சன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com