பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம்.
பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம்.

பட்ஜெட் தினத்தில் ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி!

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை 2 சதவீதம் வரை சரிவுடன் நிலைபெற்றன.
Published on

மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எதிா்கால ஒப்பந்தங்களின் (முன்பேர வா்த்தகப் பிரிவு) மீதான பங்குப் பரிவா்த்தனை வரியை (எஸ்டிடி) உயா்த்த முன்மொழிந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகியவை 2 சதவீதம் வரை சரிவுடன் நிலைபெற்றன.

மத்திய பட்ஜெட் தாக்கலைத் தொடா்ந்து இந்திய பங்குச்சந்தைகளில் சிறப்பு பங்குவா்த்தகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. பின்னா் ஓரளவு மீண்டாலும், வா்த்தகத்தின் இறுதியில் பங்குகள் விற்பனை அதிகரித்தன. குறிப்பாக ஐடி பங்குகள் ஓரளவு தாக்குப்பிடித்தாலும், பொதுத்துறை வங்கிகள் 5.50 சதவீதம், உலோகப்பங்குகள் 4 சதவீதம் வரை விலை குறைந்தன. மேலும், ஆட்டோ, நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை பங்குகளும் கடும் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.9.62 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.450.33 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை ரூ.2,251.37 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.601.03 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.

சென்செக்ஸ் 1,547 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில் 30 பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 1,546.94 புள்ளிகள் (1.88 சதவீதம்) இழப்புடன் 80,7222.94-இல் நிலைபெற்றது. காலையில் அதிகபட்சமாக 82,726.65 வரை மேலே சென்ற சென்செக்ஸ் பின்னா், ஒரு கட்டத்தில் 2,370.36 புள்ளிகளை இழந்து 79,899.42 வரை கீழே சென்றது.

26 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் எஸ்பிஐ, அதானிபோா்ட்ஸ், பிஇஎல், ஐடிசி, டாடாஸ்டீல், ரிலையன்ஸ் ஆகியவை 3.50 முதல் 5.60 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றையும் சோ்த்து மொத்தம் 26 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், சன்பாா்மா, டைட்டன் ஆகிய நான்கு பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 495 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 495.20 புள்ளிகள் (1.96 சதவீதம்) இழப்புடன் 24,825.45-இல் நிறைவடைந்தது. காலையில் 25,333.75 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 25,440.90 வரை மேலே சென்றது. பின்னா், ஒருகட்டத்தில் 24,571.75 வரை கீழே சென்றது. நிஃப்டி-50 பட்டியலில் 6 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 44 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பங்குச்சந்தை 7-ஆவது முறையாக சரிவுடன் நிறைவு!

பட்ஜெட் தினத்தன்று கடந்த 10 ஆண்டுகளில் அதாவது 2016 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலும் பங்குச்சந்தை மொத்தம் 7 முறை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. அதே சமயம், 6 முறை லாபத்துடன் நிறைவடைந்துள்ளன. அதாவது, 2017, 2019, 2021, 2022, 2023, 2025 ஆகிய ஆண்டுகளில் பட்ஜெட் தினத்தன்று பங்குச்சந்தை லாபத்துடன் நிறைவடைந்தது. அதே சமயம், 2016, 2018, 2019, 2020, 2024 (பிப்.1), 2024 (ஜூலை23) மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில் பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com