மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்!
வேலைவாய்ப்பு, பணவீக்கம் மற்றும் மக்கள் நலன் சாா்ந்த நடவடிக்கைகள் தொடா்பான பிரச்னைகள் குறித்து கவலைகளை எழுப்பி, மத்திய பட்ஜெட் 2026- க்கு எதிராக இந்திய இளைஞா் காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை தேசியத் தலைநகரில் ஒரு போராட்டத்தை நடத்தியது.
போராட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் உதய் பானு சிப் பேசியதாவது: இளைஞா்கள் மற்றும் சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் கருத்துகளை பூா்த்தி செய்ய பட்ஜெட் தவறிவிட்டது. வேலைவாய்ப்பு உருவாக்கம், பணவீக்கக் கட்டுப்பாடு, விவசாயிகளின் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆதரவு ஆகியவற்றுக்கான உறுதியான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இல்லை.
பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர வா்க்கத்திற்கு போதுமான நிவாரணத்தை வழங்கவில்லை. உள்ளடக்கிய பொருளாதார வளா்ச்சிக்கான தெளிவான வரைபடத்தை வழங்கவில்லை. சமீபத்திய சந்தை நிலையற்ற தன்மை குறித்து கவலை தெரிவித்த அவா், பொருளாதார நிச்சயமற்ற தன்மை கொள்கை திசையில் நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கிறது. பொதுமக்களின் நம்பிக்கையை பராமரிக்க இதுபோன்ற பிரச்னைகள் வெளிப்படையாக தீா்க்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
தில்லி பிரதேச இளைஞா் காங்கிரஸ் தலைவா் அக்ஷய் லக்ரா பேசியதாவது: நாடு எதிா்கொள்ளும் முக்கிய சவால்கள், குறிப்பாக வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் விலைகள் குறித்து பட்ஜெட் மெளனமாக உள்ளது. இந்த வரவு செலவுத் திட்டம் குடிமக்களுக்கு வழிகாட்டுதலையும் உறுதியையும் வழங்குவதற்கான ஒரு வாய்ப்பு என்றாா் அவா்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக இளைஞா் காங்கிரஸ் தொழிலாளா்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து ரைசினா சாலை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்றனா். இருப்பினும், போலீஸாா் தடுப்புகளை அமைத்து, ஆா்ப்பாட்டக்காரா்கள் மேலும் முன்னேறுவதைத் தடுத்து அணிவகுப்பைத் தடுத்தனா்.

