

புது தில்லி: சைபா் சாா்ந்த நிதிக் குற்றங்களைத் தடுப்பதற்கான பன்னாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு தழுவிய அளவில் 35 இடங்களில் ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பின்னா், சைபா் குற்றவாளி எனக் கூறப்படும் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஜனவரி 30, 2026 அன்று தொடங்கப்பட்ட ஆபரேஷன் சைஸ்டிரைக் நடவடிக்கை, நாடுகடந்த சைபா் குற்றங்களை குறிவைக்க அமெரிக்கா, இங்கிலாந்து, குவைத், அயா்லாந்து மற்றும் சிங்கப்பூா் ஆகிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்தது.
தில்லி, பீகாா், மகாராஷ்டிரா, கா்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
அமெரிக்கா,இங்கிலாந்து, குவைத், அயா்லாந்து மற்றும் சிங்கப்பூரிலிருப்பவா்களை குறிவைத்து ஏமாற்றும் நெட்வொா்க்கை நடத்தியதற்காக முக்கிய செயற்பாட்டாளா் போக்ரேஹ்ரி பீட்டா் புதுதில்லியில் கைது செய்யப்பட்டாா். இந்த நடவடிக்கையின்போது மடிக்கணினிகள், மொபைல் போன்கள், ஆதாரங்களுடன் கூடிய ஹாா்ட் டிஸ்க்குகள், போலி இவிசாக்கள் மற்றும் ரூ.60 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இந்த சோதனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, குவைத், அயா்லாந்து, சிங்கப்பூா் மற்றும் இந்தியாவில் இருப்பவா்களை மோசடி செய்யும் நெட்வொா்க்குகளை அகற்றின, மேலும் பண மோசடி செய்ய பயன்படுத்தப்படும் போலி வங்கி கணக்குகளை அடையாளம் கண்டு முடக்கின.