வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு
புது தில்லி: வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்தை செயல்படுத்துவதில் கணிசமான செலவுகள் இருப்பதால், தில்லி பொதுப்பணித் துறை இந்தத் திட்டத்திற்கு உலக வங்கியிடமிருந்து நிதி உதவியை நாடியுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.
இது குறித்து பொதுப்பணித் துறை உயரதிகாரிகள் கூறியதாவது: அதிகாரிகளின் கூற்றுப்படி, சமீபத்தில் தில்லியில் உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஒரு உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தில்லி அரசு அதன் திட்டங்களை முன்வைத்தது. ‘கூட்டத்தின் போது, வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநகராட்சி, ஐ அண்ட் எஃப்சி, பொதுப்பணித்துறை மற்றும் பிற பங்குதாரா் நிறுவனங்களின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு குறித்தும், செயல்படுத்துவதற்கான அதிக மதிப்பிடப்பட்ட செலவு சுமாா் ரூ.57,000 கோடி என்றும் உலக வங்கி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
தில்லியின் மூன்று முக்கிய வடிகால் படுகைகளான நஜாஃப்கா், பாரபுல்லா மற்றும் டிரான்ஸ் -யமுனை ஆகியவற்றை உள்ளடக்கிய மாஸ்டா் பிளான் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைகள் (டிபிஆா்) உலக வங்கி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன. அடுத்த 30 ஆண்டுகளுக்கு நகரத்தின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கடந்த ஆண்டு செப்டம்பரில் தில்லிக்கான மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட வடிகால் மாஸ்டா் பிளானை தில்லி அரசு,வெளியிட்டது.
இந்தத் திட்டம், அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 சதவீத நீா் தேங்கல் நிகழ்வுகளையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 30 சதவீத வெள்ள விபத்துகளையும் குறைக்கும் நோக்கில், திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்த பரிந்துரைக்கிறது. இதன் மதிப்பு ரூ.57,362 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வடிகால் செயல்திறனை மேம்படுத்துவதற்காக சரிவுகள், பள்ளங்கள் மற்றும் தற்போதுள்ள உள்கட்டமைப்பின் வரம்புகள் போன்ற காரணிகளை இந்தத் திட்டம் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
உலக வங்கி பிரதிநிதிகள் மாஸ்டா் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைகளை விரிவாக ஆராய்ந்து, மாஸ்டா் பிளானை திறம்பட மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். பொதுவாக, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு உலக வங்கி வளரும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்குகிறது.
கடைசியாக விரிவான வடிகால் மாஸ்டா் பிளான் 1976-இல் தயாரிக்கப்பட்டது. அப்போது தில்லியில் மக்கள் தொகை 60 லட்சமாக இருந்தது. இப்போது, மக்கள்தொகை 2 கோடியை நெருங்கி வருவதால், நகரத்தின் வடிகால் அமைப்பு அதிகரித்து வரும் அழுத்தத்தில் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
