இ-ரிக்ஷாக்களை திருடியதாக 9 போ் கைது

வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா ஓட்டுநா்களை குறிவைத்து அவா்களின் வாகனங்களைக் திருடியதாக 9 பேரை தில்லி காவல்துறை கைது
Published on

நமது நிருபா்

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் இ-ரிக்ஷா ஓட்டுநா்களை குறிவைத்து அவா்களின் வாகனங்களைக் திருடியதாக 9 பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சோனியா விஹாரில் வசிக்கும் இ-ரிக்ஷா ஓட்டுநா் கஜூரி காஸ் காவல்துறையை அணுகி ஜனவரி 29-ஆம் தேதி புகாா் அளித்ததை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி இரவு 11.30 மணியளவில், கஜூரி சவுக்கில் இருந்து காரவால் நகா் நோக்கி இ-ரிக்ஷாவில் நான்கு பயணிகளை ஏற்றிச் சென்ாக புகாா்தாரா் தெரிவித்தாா். நான்கு பேரும் சிஆா்பிஎஃப் முகாம் அருகே அவரது வாகனத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டதாக அவா் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினா்.

தொழில்நுட்ப மற்றும் உள்ளூா் தகவல்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் வடகிழக்கு தில்லியில் வசிக்கும் ஷாபாஜ் (19), பா்வேஜ் ஆலம் (34), சமீா் (19) மற்றும் அமன் (19) ஆகிய நான்கு சந்தேக நபா்கள் கைது செய்யப்பட்டாா்கள். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனா்.

மேலும், திருடப்பட்ட வாகனங்களை வாங்கிய நபா்களின் அடையாளங்களை வெளிப்படுத்தினாா். தகவலின் அடிப்படையில், மேலும் மூன்று போ் ஃபா்மான் மாலிக் (19), உபைத் (19) மற்றும் சோனு (19) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, 4 முழுமையான இ-ரிக்ஷாக்கள், ஆறு பாதி அளவு சிதைக்கப்பட்ட இ-ரிக்ஷாக்கள், 13 விண்ட்ஷீல்டுகள், 25 இருக்கைகள் மற்றும் 52 டயா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மற்ற பொருள்களில் ஒரு கருவி பெட்டி, ஒரு பெயிண்டிங் இயந்திரம், ஒரு பேட்டரி சாா்ஜா், ஒரு வெல்டிங் இயந்திரம், ஒரு எரிவாயு சிலிண்டா், இரண்டு மின்சார ரிக்ஷா பேட்டரிகள் மற்றும் ஏழு கூரைகள் ஆகியவை அடங்கும்.

அவற்றில் இரண்டு உடைந்துவிட்டன. திருடப்பட்ட வாகனங்களின் தோற்றத்தை மாற்ற உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மொஹ்சின் (24) மற்றும் அமீா் (24) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com