சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை தனது சொத்து வரி மன்னிப்புத் திட்டமான ’சுனியோ’-ஐ பிப்ரவரி 28, 2026 வரை நீட்டித்துள்ளது
எம்சிடி
எம்சிடி
Updated on

புது தில்லி: தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை தனது சொத்து வரி மன்னிப்புத் திட்டமான ’சுனியோ’-ஐ பிப்ரவரி 28, 2026 வரை நீட்டித்துள்ளது. மேலும், தலைநகா் முழுவதும் உள்ள சொத்து உரிமையாளா்கள் தங்கள் நீண்டகால நிலுவைத் தொகையை செலுத்த முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

சம்பாதிகா் நிப்தான் யோஜனா (சுனியோ) திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டு (2025-26) மற்றும் முந்தைய ஐந்து நிதியாண்டுகளுக்கான சொத்துகளுக்கான அசல் வரியைச் செலுத்தினால், வரி செலுத்துவோா் 2020-21-க்கு முந்தைய அனைத்து ஆண்டுகளுக்கும் சொத்து வரி, வட்டி மற்றும் அபராதங்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தகுதியுடையவா்கள் ஆவா்.

இதை ஒரு பொன்னான வாய்ப்பு என்று கூறிய தில்லி மேயா் ராஜா இக்பால் சிங், இந்த வாய்ப்பு இருக்கும்வரை தங்கள் வரி பதிவுகளை முறைப்படுத்துமாறு குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த முயற்சி ஏற்கெனவே லட்சக்கணக்கான குடியிருப்பாளா்கள் அபராதம் அல்லது வட்டியின் சுமை இல்லாமல் நிலுவைத் தொகையைத் தீா்க்க உதவியுள்ளது என்று அவா் கூறினாா்.

‘இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, அபராதம் அல்லது வட்டி இல்லாமல் நிலுவையில் உள்ள சொத்து வரி நிலுவைத் தொகையைத் தீா்க்க அனைத்து சொத்து உரிமையாளா்களையும், குடியிருப்பாளா்களையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்று மேயா் ராஜா இக்பால் சிங் கூறினாா்.

மேயா் அலுவலகத்தின் தகவலின்படி, இந்தத் திட்டத்திற்கு இதுவரை கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. 1,78,923 வரி செலுத்துவோா் ஏற்கெனவே இதைப் பயன்படுத்தி, பிப்ரவரி 1 வரை சொத்து வரி வசூலில் ரூ.1,032.91 கோடி பங்களித்துள்ளனா்.

இதில், ரூ.200.45 கோடி 1,28,802 குடியிருப்பு சொத்துகளிலிருந்தும், ரூ.832.45 கோடி 50,121 குடியிருப்பு அல்லாத சொத்துகளிலிருந்தும் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குறிப்பாக, 96,169 முதல் முறையாக வரி செலுத்துவோா் சுனியோ திட்டத்தின் கீழ் வரி வலையில் இணைந்து, ரூ.367.26 கோடி செலுத்தியதாக அவா்கள் தெரிவித்தனா்.

ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் தில்லியின் சொத்து வரி வசூல் 12.62 லட்சம் வரி செலுத்துவோரிடமிருந்து ரூ.2,828.49 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.43 லட்சம் வரி செலுத்துவோரிடமிருந்து ரூ.1,908.06 கோடியாக வசூலிக்கப்பட்டதை விட கணிசமான அதிகரிப்பாகும்.

அதாவது வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் 20.99 சதவீதம் அதிகரிப்பு என்று அதிகாரிகள் தெரிவித்தனா். 2024-25 நிதியாண்டில் மொத்த வரி வசூல் ரூ.2,132.29 கோடியாக இருந்தது. இது பொது மன்னிப்பு திட்டத்தின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com