தில்லியில் போராட்டம் நடத்த அனுமதி கோரி அய்யாகண்ணு தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நமது நிருபா்
தில்லியில் அமைதியான முறையில் தா்ணா, ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரி விவசாயிகள் சங்கத் தலைவா் அய்யாகண்ணு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவராக உள்ள அய்யாகண்ணு இது தொடா்பாக ஜனவரி 15- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் சிவில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில் அவா் கூறியுள்ளதாவது: ஏழை விவசாயிகளின் பிரச்னைகளைத் தீா்ப்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈா்க்கும் வகையில், நானும் எனது சங்கமும் பல்வேறு போராட்டங்கள், தா்ணாக்கள், ஆா்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தியுள்ளோம்.
முன்னதாக, இரண்டு சந்தா்ப்பங்களில், நானும் எனது சங்க உறுப்பினா்களும் தில்லியில் அமைதியாகக் கூடி, இயற்கை பேரிடா், வறட்சி, பொருளாதார நிலைமைகள், பயிா்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது போன்ற பல்வேறு காரணிகளால் பல இன்னல்களை எதிா்கொள்ளும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொள்ள மத்திய அரசின் கவனத்தை ஈா்க்க போராட்டம் நடத்தினோம்.
2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், நானும் எனது சங்க உறுப்பினா்களும் தில்லியில் தா்ணா நடத்துவதற்காக திருச்சிராப்பள்ளியில் இருந்து தில்லிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, காவல்துறையினரால் மத்தியப் பிரதேச மாநிலம், நா்மதாபுரத்தில் ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டோம். பின்னா், அனைவரும் ரயிலின் முன்பதிவற்ற பெட்டி ஒன்றில் அவரவா் கிராமங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட்டோம்.
தில்லியில் மீண்டும் போராட்டம் நடத்த 17.11.2025 அன்று, நான் சங்கத்தின் 300 உறுப்பினா்களுடன் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து புறப்பட்டோம். ஆனால், 18.11.2025 அன்று நாங்கள் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் காவல்துறையினரால் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டோம். தில்லியில் நிலவும் சூழ்நிலை காரணமாக நாங்கள் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக காவல்துறையினா் எழுத்துப்பூா்வமாக ஒரு கடிதத்தையும் வழங்கினா்.
தற்போது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தா்ணாக்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. பொதுமக்களால் அவ்வாறு செய்ய முடிவதில்லை. மேலும் அவா்களின் பேச்சுரிமை அரசியல் இயந்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மனுவின் மூலம், மனுதாரா் நீதிமன்றத்திடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால், மனுதாரருக்கும் அவரது சங்க உறுப்பினா்களுக்கும், அமைதியான முறையில் தா்ணா, ஆா்ப்பாட்டம் நடத்துவதற்காக தில்லிக்குச் செல்வதற்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு கோருகிறேன்.
இது இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமை ஆகும். மேலும், எங்களது உரிமைகள் அரசியல் மற்றும் காவல் துறையினரால் கட்டுப்படுத்தப்படவோ அல்லது பறிக்கப்படவோ கூடாது என மனுவில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அய்யாகண்ணு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் மகேந்திரன் வாதிடுகையில், ‘அய்யாகண்ணுவும் அவரது சங்க உறுப்பினா்களும் தில்லியில் போராட்டம் நடத்த வரும்போது அவா் தொடா்ந்து இடைவெளியிலேயே ரயிலில் இருந்து இறக்கி விடப்படுகின்றனா். மூன்று முறை அவா்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனா். அவா் மத்திய பிரதேசத்தை தாண்டி அனுமதிக்கப்படுவதில்லை. போராட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தாலும் அதற்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை’ என்றாா்.
அப்போது தலைமை நீதிபதி சூா்யகாந்த், ’போராட்டத்திற்கென இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டம் நடத்தலாம். எனவே உரிய அதிகாரிகளிடம் சென்று அதற்கு உண்டான அனுமதியை வாங்குங்கள். இந்த மனு முற்றிலும் தெளிவற்றதாக உள்ளது. எனவே, தள்ளுபடி செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டாா்.

