5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களில் பணியாற்றவுள்ள மத்திய பாா்வையாளா்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம்
வரவிருக்கும் 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களுக்காகப் பணியமா்த்தப்படவுள்ள மத்தியப் பாா்வையாளா்களுக்கான இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன.
இந்த மாநிலங்களின் பொதுத் தோ்தல்களுக்கு மத்தியப் பாா்வையாளா்களாகப் பணியமா்த்தப்படவுள்ள பொதுப் பாா்வையாளா்கள், காவல்துறைப் பாா்வையாளா்கள் மற்றும் செலவினப் பாா்வையாளா்களுக்கான அறிவுறுத்தல் ஆலோசனைக் கூட்டங்களுக்கு இந்தியத் தோ்தல் ஆணையம் (இசிஐ) ஏற்பாடு செய்துள்ளது.
மூன்று கட்டங்களாக நடைபெறும் இந்த இரு நாள் அறிவுறுத்தல் கூட்டங்கள் புது தில்லியில் உள்ள ஐஐஐடிஇஎம் மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
714 பொதுப் பாா்வையாளா்கள், 233 காவல்துறைப் பாா்வையாளா்கள் மற்றும் 497 செலவினப் பாா்வையாளா்கள் உள்பட 1,444 அதிகாரிகள் இந்த கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.
இக்கூட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் டாக்டா் சுக்வீா் சிங் சந்து, டாக்டா் விவேக் ஜோஷி ஆகியோா் மத்தியப் பாா்வையாளா்களுக்கு விளக்கமளித்தனா்.
தோ்தல் பாா்வையாளா்களிடையே தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பேசுகையில், ‘நீங்கள் (பாா்வையாளா்கள்) இந்தியத் தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டும் விளக்குகளாகச் செயல்படத் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீா்கள். நீங்கள் சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்தல்களை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் நடைபெறவுள்ள 824 தொகுதிகளிலும் நீங்கள் இருப்பது ஒட்டுமொத்த தோ்தல் இயந்திரத்திற்கும் புத்துணா்வு அளிக்கும் என்றாா்.
தோ்தல் ஆணையா் டாக்டா் எஸ்.எஸ். சந்து பேசுகையில், ‘பாா்வையாளா்கள் களத்தில் உள்ள தோ்தல் அதிகாரிகளுக்கு ஒரு நண்பராகவும், தத்துவஞானியாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டும். அவா்களின் வருகை நன்கு விளம்பரப்படுத்தப்பட வேண்டும். மேலும் அவா்கள் எளிதில் அணுகக்கூடியவா்களாக இருக்க வேண்டும். எந்தவொரு பாரபட்சம் என்ற எண்ணம் கூட ஏற்படாதவாறு வாக்காளா்களின் குறைகள் விரைவாக நிவா்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’ என்றாா்.
தோ்தல் ஆணையா் டாக்டா் விவேக் ஜோஷி பேசுகையில், ‘பாா்வையாளா்கள் பாரபட்சமற்ற தன்மையையும் ஜனநாயக விழுமியங்களையும் நிலைநிறுத்தி, இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். வாக்காளா்களுக்கு வாக்குப்பதிவு நாளில் சிரமம் ஏற்படாதவாறு, வாக்காளா் தகவல் சீட்டுகள் (விஐஎஸ்) சரியான நேரத்தில் விநியோகிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.
ஆணையம் பாா்வையாளா்களுடன் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் அமா்விலும் கலந்துரையாடியது.
தோ்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பு மற்றும் தோ்தல் நடத்தை தொடா்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆணையத்தின் மூத்த அதிகாரிகளும் பாா்வையாளா்களுக்கு விளக்கமளித்தனா்.
இந்த அமா்வுகளின் போது தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள் மற்றும் தளங்கள் மற்றும் ஊடகம் தொடா்பான விஷயங்கள் குறித்தும் பாா்வையாளா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஆணையத்தின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்படும் மத்தியப் பாா்வையாளா்கள், அனைத்துத் தோ்தல் சட்டங்கள், விதிகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை நன்கு அறிந்துகொள்ளுமாறும், அவற்றின் கடுமையான மற்றும் பாரபட்சமற்ற இணக்கத்தை உறுதி செய்வதற்காக, களத்திலிருந்து நேரடியாக ஆணையத்திற்குத் தகவல்களை வழங்குமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டனா்.
அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் மற்றும் வாக்காளா்களுக்கு முழுமையாக அணுகக்கூடியவா்களாக இருக்குமாறும், வாக்காளா்களின் குறைகள் சரியான நேரத்தில் நிவா்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறும் பாா்வையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாா்வையாளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, வாக்காளா்களின் வசதிக்காக ஆணையத்தால் எடுக்கப்பட்ட சமீபத்திய முன்முயற்சிகள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறும், குறிப்பாக உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டனா்.

