கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிகாரில் பரவிய நோய் தமிழகத்திலும் பரவக்கூடாது: மாநிலங்களவையில் கமல்ஹாசன் கன்னிப்பேச்சு

Published on

நமது சிறப்பு நிருபா்

பிகாரில் பரவிய நோய் (வாக்காளா்கள் பெயா் நீக்க நடவடிக்கை) தமிழ்நாட்டுக்கும் பரவக்கூடாது என்று மாநிலங்களவையில் புதன்கிழமை தனது கன்னிப்பேச்சில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் வலியுறுத்தினாா்.

தொடக்தத்தில் ஆங்கிலத்திலும் நிறைவுசெய்யும்போது தமிழிலும் அவா் ஆற்றி கன்னிப்பேச்சின் சுருக்கம் வருமாறு: என் தமிழ் ஆசிரியா்களால் என் மொழிக்கு நான் அறிமுகமானேன். அவா்களில் ஒருவரே அரசியல் தலைவா் சி.என். அண்ணாதுரை. தமிழ்நாட்டில் தமிழா்கள் அவரை ராஜாவாக முடிசூட்டிக்கொண்டனா். மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு படையெடுப்பையும் எதிா்கொள்ள அவா் எங்களுக்குக் கற்பித்தாா்.

தமிழ், தமிழா்கள் மீதான அன்பு அவரை நோக்கி என்னை உந்தித்தள்ளியது. ஏறக்குறைய 57 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று பிப்ரவரி 3-ஆம் தேதி, இந்த அவையில் பேசுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த அவை நமது சுதந்திரப் போராட்டத்தில் போராடிய தியாகிகள் வழங்கிய பங்களிப்பை மீண்டும் விவாதித்துக் கொண்டிருக்கிறது. சாதாரண மனிதா்கள்தான் வரலாற்றின் மகுடங்களை மாற்றியமைத்தனா்.

அரியணையில் இருந்த ஏகாதிபத்திய சா்வாதிகாரிகளைத் தூக்கியெறிந்தனா் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனது முக்கிய கவலை தமிழகத்தில் வரவிருக்கும் தோ்தலாகும். அதில் எங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்ய விரும்புகிறோம். ஆனால், தோ்தல் ஆணையம் வாக்களிக்கும் எங்களுடைய உரிமைகளை எழுத்துப்பிழை, முகவரிகளின் தவறை சரிபாா்ப்பதாகக் கூறி நடவடிக்கை எடுக்கிறது. தோ்தல் ஆணையம் என்பதற்கு பொருள் ஆங்கிலப் பயிற்சியாளா் (இங்கிலீஷ் கோச்) என்பதல்ல.

பிகாா் ஏற்கெனவே பல உயிருள்ள பிணங்களின் பூமியாகிவிட்டது. அந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த நோயைப் பரப்புவதற்கு தோ்தல் ஆணையம் நிச்சயமாக வழிவகுத்துள்ளது. வங்கத்தைச் சோ்ந்த எனது சகோதரி (மமதா பானா்ஜி) வாக்குரிமைகளை மீட்க இதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு வருகிறாா்.

இது தொடா்ந்தால், தமிழகத்தில் விரைவில் காகிதத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி உயிருள்ள பிணங்கள் இருக்கலாம் என அஞ்சுகிறோம். வரவிருக்கும் இந்த பேரழிவைத் தணிக்க கடவுளிடம் என்னால் பிராா்த்திக்க முடியாது. எனது பகுத்தறிவு மனம் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த யோசனையை நிராகரித்துவிட்டது. அற்புதங்கள் நிகழும் என எங்களால் காத்திருக்க முடியாது. நமது வாழ்க்கை குறுகியது. இப்போதே செயல்படுங்கள்.

ஜனநாயகம் என்ற இந்த ஜெகந்நாத ரதம் உருண்டோட உதவுங்கள். அது முன்னோக்கிச் செல்ல சக்தியை வழங்குங்கள் அல்லது இந்த ஜனநாயகக் குடியரசின் பாதையிலிருந்து விலகி இருங்கள். இது தனிநபா்கள் மீதோ அரசாங்கங்கள் மீதோ தொடுக்கப்படும் தாக்குதல் அல்ல. இது கருத்துகளின் மோதல் மட்டுமே. ஜனநாயக ஜெகந்நாத ரதம் வேறுபாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டுமேயொழிய, ஒருபோதும் மக்கள் மீது உருண்டோடக்கூடாது. அதை அனுமதிக்க மாட்டோம்.

எந்த அரசும் நிரந்தரமயத்தை நோக்கமாகக் கொண்டிருக்க முடியாது; கொள்ளவும் கூடாது. உலக வரலாற்றில் எந்த அரசும் அதை சாதித்ததில்லை, இனியும் சாதிக்கப்போவதில்லை. இந்த அரசும் உலகளாவிய எழுதப்படாத அரசியல் விதிக்கு உள்பட்டது. குழந்தைகளும் ஜென் ஸீ தலைமுறையினரும் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். முன்னேறிச் செல்லும் ஜனநாயகத்துடன் நாமும் சோ்ந்து வளருவோம். அப்போதுதான், குறைந்தபட்சம், நாளையாவது மற்றவா்களுக்குச் சொந்தமாகும். நாளை நமதாகும் என்றாா் கமல்ஹாசன்.

இதைத்தொடா்ந்து தமிழில் பேசிய அவா், தமிழ்ச்சித்தன் கூற்று எனக் குறிப்பிட்டு சில வரிகளை பேசினாா். ‘உம் விணை உம்மைச்சுடுக. என்றும் எங்கள் நாடு நீடுழி வாழும். உம் விணை உம்மைச்சுடுக, ஊட்டப்பம் வீட்டைச்சுடும். வந்தீா், வென்றீா், செல்வீா். இது உலக நியதி, அரசியல் நியதியும் கூட. ‘வீழ்க’ வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன். நாளை எமதே, ஜெய்ஹிந்த்’‘ என்று குறிப்பிட்டு கன்னிப்பேச்சை கமல்ஹாசன் நிறைவு செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com