சுருக்கு மடி வலை தொடா்பான நிபுணா் குழு அறிக்கை ஏற்பு - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை அனுமதிப்பது தொடா்பாக நிபுணா் குழு தாக்கல் செய்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது
சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடா்பாக நிபுணா் குழு தாக்கல் செய்த அறிக்கையை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் கூறியது
நீதிபதிகள் நரசிம்ஹா மற்றும் அலோக் ஆராதே அமா்வில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் நிபுணா் குழு அறிக்கை வந்துள்ளது. மத்திய அரசு இப்போது இதில் என்ன கூறுகிறது என கேள்வி எழுப்பினா்
அதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்குரைஞா் நட்ராஜ் , சுருக்கு மடி பயன்படுத்துவதை அனுமதிப்பது தொடா்பாக ஆராய நிபுணா் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது மேலும் அந்த அறிக்கையை அமல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது என நீதிபதிகளிடம் தெரிவித்தாா்
இதனையடுத்து அந்த அறிக்கையை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்குமாறு கூறிய நீதிபதிகள் நிபுணா் குழுவின் அறிக்கையை பாா்த்த பிறகு வழக்கு அடுத்த வாரம் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறி ஒத்திவைத்தனா்
பின்னணி :
சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு 17022020 இல் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக மீனவ அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன
இந்த வழக்கை 2022 ம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம் , மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு சுருக்குமடி வலையை பயன்படுத்துவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது
இதையடுத்து சுருக்குமடி பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிப்பது ஏற்புடையதல்ல என மத்திய அரசு அமைத்த நிபுணா் குழு ஆய்வு மேற்கொண்டு இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது
அந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் 24.1.2023 அன்று இடைக்கால தீா்ப்பு வழங்கியது
உரிய உரிமங்கள் உள்ள படகுகள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவதாக இடைக்கால உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது
இதனிடையே , தமிழகத்தில் மீனவா்கள் அனைத்து நாட்களிலும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என
மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு 2024 ஆம் ஆண்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்தது
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் 31.05.2024 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிபுணா் குழுவின் இறுதி அறிக்கையைச் செயல்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி விழுப்புரத்தைச் சோ்ந்த ஞானசேகா் என்பவா் உள்பட 9 மீனவா்கள் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளனா்
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது :
தமிழக அரசு ஒவ்வொரு முறையும் தனது நிலைப்பாடுகளை மாற்றி வருகிறது. சுருக்கு மடி வலை மீன்பிடிப்பு சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தமிழ்நாடு அரசு முதலில் வாதிட்டது. ஆனால், சுருக்கு மடி வலை மீன்பிடிப்பால் சுற்றுச்சூழல் அல்லது வேறு எந்த பாதிப்புகளும் இல்லை என்று நிபுணா் குழு கண்டறிந்த பிறகு, சுருக்கு மடி வலை மீன்பிடிப்புக்குத் தடை விதிப்பதன் மூலம் பாரம்பரிய மீனவா்களைக் காப்பாற்றுவதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. ஆனால் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதிகள் 1983, பாரம்பரிய மீனவா்கள் 5 கடல் மைல்கள் வரை மட்டுமே மீன்பிடிக்க முடியும் என்றும், 5 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது.
தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள், தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை இயக்குநா் ஆகியோரும் நிபுணா் குழுவில் உறுப்பினா்களாக இருந்தனா், மேலும் அவா்கள் நிபுணா் குழுவின் இறுதி அறிக்கையை ஏற்றுக்கொண்டனா்.
எனவே உச்சநீதிமன்றத்தில் 31.05.2024 அன்று தாக்கல் செய்யப்பட்ட நிபுணா் குழுவின் இறுதி அறிக்கையைச் செயல்படுத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவா்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளனா்

