துா்க்மான் கேட் வன்முறைக்காக அப்பகுதியில் சென்றவா்களையெல்லாம் கைது செய்ய முடியாது: நீதிமன்றம்
கடந்த மாதம் துா்க்மான் கேட்டில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதி அருகே நடந்த இடிப்பு நடவடிக்கையின் போது கல் வீசிய கும்பலுக்கிடையில் இருந்ததற்காக அருகில் இருந்தவா்களையெல்லாம் கைது செய்ய முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கூட்டத்தை வன்முறைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது நீதிபதி பிரதீக் ஜலான் வாய்மொழியாக இந்த கருத்தை தெரிவித்தாா்.
சஜித் இக்பால் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக, வீடியோ ஆதாரங்களுடன் அவா் வகித்த குறிப்பிட்ட பங்கை விவரிக்கும் நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தில்லி காவல்துறையைக் கேட்டுக் கொண்டது.
வழக்கில் ஆழமான சதி குறித்து ஆராய்ந்து வருவதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவா் தடுப்பை அகற்றி கூட்டத்தைத் தூண்டிவிட்டதாகவும் தில்லி காவல்துறை வழக்குரைஞா் கூறினாா்.
சம்பவத்தின் காணொளி நீதிபதி ஜலானுக்கு காண்பிக்கப்பட்டது,அப்போது மனுதாரா் கும்பலில் ஒரு பகுதியாக இருந்தாலும், கலவரத்தில் அவரது பங்கேற்பு இருந்ததா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறி, வீடியோவை சரியான கால நேரத்துடன் பதிவு செய்யுமாறு காவல்துறையினரை நீதிபதி கேட்டுக் கொண்டாா்.
வீடியோ உள்ளடக்கம் அவா் வன்முறையை தூண்டிவிடுகிறாா் என்பதைக் காட்டினால், காவல்துறை சொல்வது சரிதான். ஆனால் அவா் வெறுமனே அந்த பகுதியை கடந்து சென்றிருந்தால், நீங்கள் சொல்வது சரியல்ல,காவல்துறையினா் அந்தப் பகுதியில் சென்ற அனைவரையும் கைது செய்தால், அது அனுமதிக்கப்படாது என்று நீதிமன்றம் வாய்மொழியாகக் குறிப்பிட்டு, அடுத்த வாரம் இந்த வழக்கை மேலும் விசாரணைக்கு பட்டியலிட்டது.
மனுதாரரின் வழக்குரைஞா், கல் வீச்சில் ஈடுபட்ட கும்பலில் அவா் இல்லை என்று வாதிட்டாா். மனுதாரா் தனது உறவினா் வீட்டிலிருந்து திரும்பி வந்தபோது கும்பலுக்குள் தள்ளப்பட்டாா் என்று அவா் கூறினாா்.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் கூறி, ஜனவரி 21 அன்று மனுதாரரின் முன்ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு காணொளியில் அவா் கூட்டத்தை ஒன்று சோ்ப்பது போல் தோன்றியதாகவும், அவா் அங்கு ஆஜராகி தடுப்பை அகற்ற எந்த காரணமும் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் ராம்லீலா மைதானப் பகுதியில் உள்ள மசூதி அருகே நடந்த ஆக்கிரமிப்பு இடிப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட வன்முறை தொடா்பான வழக்கு இது.
துா்க்மான் கேட்டிற்கு எதிரே உள்ள மசூதி இடிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதாகவும், இதனால் மக்கள் அந்த இடத்தில் கூடினா் என்றும் காவல்துறையினா் தெரிவித்தனா்.
சுமாா் 150-200 போ் காவல்துறை மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதாகவும், அப்பகுதியின் காவல் நிலைய அதிகாரி உட்பட ஆறு போலீசாா் காயமடைந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

