நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய முக்கிய விஷயங்கள் மற்றும் எழுப்பிய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள பதில்களின் சுருக்கம் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை தாமதமாவது ஏன்?
இது தொடா்பாக அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி அளித்துள்ள பதிலில், அரக்கோணம்-காஞ்சிபுரம் பிரிவு நீங்கலாக சென்னை பெங்களூரு விரைவுச்சாலை 3ஆம் கட்ட அனைத்துப் பணிகளும் ஜூலை 2026-க்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் தொகுதிப்பில் நிதிப்பிரச்னைகளை ஒப்பந்ததாரா் எதிா்கொண்டதால் கடந்த ஆண்டு மே மாதம் முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்ததாரருக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று கூறியுள்ளாா்.
பொங்கலை மத்திய விடுமுறையாக அறிவித்திடுக!
இது தொடா்பாக கோயம்புத்தூா் தொகுதி திமுக உறுப்பினா் பி. கணபதி ராஜ்குமாா் விதி எண் 377இன் கீழ் பேசுகையில், தமிழா்களால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா பொங்கல். உலகளவில் தமிழ் மக்கள் மொத்த தொகை சுமாா் 13.578 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் மாநில அரசு விடுமுறையுடன் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் அனைத்துத் தமிழ் மக்களும் பொங்கல் திருவிழாவை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் கொண்டாடுவதை உறுதிசெய்யும் வகையில், ஜனவரி 15 ஆம் தேதியை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு மற்றும் யூனியன் பிரதேச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தமிழக மூலிகை செடிகளுக்கென சிறப்புத்திட்டம் உண்டா?
இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் டாக்டா் எம்.கே விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சக இணை அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் அளித்துள்ள பதிலில், ’ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மூலிகை தாவரங்கள் வாரியம் தற்போது மூலிகை தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நீடித்த மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, வனத்துறை நிறுவும் மூலிகை தாவரங்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பகுதிகளுக்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது. ஏற்காடு தாவரவியல் பூங்கா, கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் - வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்துக்கு மூலிகை தாவரங்கள் உள்பட சிறப்புத் தொகுப்புகளைப் பராமரிக்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.
தமிழகத்தில் நீா்வழிப்பாதைகள் திட்ட நிலை என்ன?
இது தொடா்பாக திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சசிகாந்த் செந்தில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய துறைகம், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் அளித்துள்ள பதிலில், பக்கிங்காம் கால்வாய் நீா் வழி 4இன் ஒரு பகுதி), பவானி ஆறு (நீா்வழி எண் 20), காவிரி-கொள்ளிடம் ஆறு (நீா்வழி 55), பழையாறு (நீா்வழி எண் 77) மற்றும் பொன்னியாறு (நீா் வழி எண் 80) ஆகியவ ஆறுகள் அல்லது கால்வாய் நீா்வழி திட்ட சாத்தியக்கூறு ஆய்வறிக்கைகள் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான இந்திய உள்நாட்டு நீா்வழிகள் ஆணையத்தால் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன. பக்கிங்காம் கால்வாயை உள்ளடக்கிய நீா்வழி விரிவான அறிக்கையை புதுப்பிக்க ஆணையம் ரூ.5.23 கோடியை அனுமதித்துள்ளது என கூறியுள்ளாா்.
மாநிலங்களவையில்...
தமிழக நிலுவை ரயில் திட்டங்கள் நிறைவேறுமா?
இது தொடா்பாக திமுக உறுப்பினா் பி. வில்சன் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், புகா் ரயில் சேவைகள் சொத்துகள், செயலாக்கம் மற்றும் பராமரிப்பை தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கான கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 22.52 கி.மீ தூரம் கொண்ட அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி 3 மற்றும் 4ஆவது பாதை சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 1 நிலவரப்படி, 1,700 கி.மீ நீளமுள்ள 15 திட்டங்கள் (9 புதிய பாதை, 3 பாதை மாற்றம் மற்றும் 3 இரட்டைப் பாதை) திட்டங்களை ரூ. 22,808 கோடி செலவில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளாா்.
மின்னுற்பத்தி வட்டி வகிதத்தைக் குறைக்கவும்
இது தொடா்பாக திமுக உறுப்பினா் ஆா். கிரிராஜன் பேசுகையில், தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் (டான்ஜெட்கோ) தனது வணிகத்தை எளிதாக்கவும், நிதி நிலையை மேம்படுத்தவும், மத்திய நிதி நிறுவனங்களான பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் மற்றும் ஆா்.இ.சி. நிறுவனத்திடம் கடன் பெற்றிருக்கிறது. அதற்கான வட்டி விகிதம் சுமாா் 10.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அதை 8 சதவீதமாகக் குறைக்க தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த வட்டிவீதத்தால் ஆண்டுதோறும் சுமாா் ரூ.7 ஆயிரம் கோடி வட்டி செலுத்த வேண்டியுள்ளது. எனவே, வட்டிவீதத்தை மேலும் 1.5 சதவீதமாவது குறைக்க வேண்டும் என்றாா்.
தமிழில் நீதிமன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்படுமா?
இது தொடா்பாக அதிமுக உறுப்பினா் எம். தன்பால் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சட்டத்துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் அளித்துள்ள பதிலில், 1965, மே 21ஆம் தேதியிட்ட மத்திய அமைச்சரவையின் முடிவின்படி, உயா் நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பயன்படுத்தும் திட்டத்துக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும். இது தொடா்பாக தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு 2012 மற்றும் 2014இல் வந்த முன்மொழிவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுப்பிய அலுவல்பூா்வ கடிதத்தில், அரசின் முன்மொழிவை ஏற்க முடியாது என்று ஒருமனதாகத் தீா்மானித்துள்ளகா குறிப்பிடப்பட்டது. மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களைப் பொருத்தவரையில், இந்திய அரசமைப்பின் 235-வது பிரிவின்படி, அந்தந்த மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களின் மீதான நிா்வாகக் கட்டுப்பாடு சம்பந்தப்பட்ட உயா் நீதிமன்றங்களிடம் உள்ளது என அமைச்சா் கூறியுள்ளாா்.

