டிஜேபி குழியில் விழுந்த இளைஞா் இறந்த விவகாரம்: மெழுகுவா்த்தி ஏற்ற முயன்ற சௌரப் பரத்வாஜ் கைது
ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை ஜனக்புரியில் சிறிது நேரம் கைது செய்யப்பட்டாா். தில்லி ஜல் போா்டு தோண்டிய 15 அடி ஆழமான குழியில் பைக்கா் ஒருவா் விழுந்து இறந்ததைக் கண்டித்து அவா் போராட்டம் நடத்த முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
ரோஹிணியின் செக்டாா் 10-இல் உள்ள ஒரு தனியாா் வங்கியின் ஊழியரான கமல் தியானி, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இடைப்பட்ட இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கழிவுநீா் குழாய் மறுசீரமைப்பு திட்டத்திற்காக தில்லி ஜல் போா்டு தோண்டிய குழியில் விழுந்து உயிரிழந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை, சௌரப் பரத்வாஜும், ஆம் ஆத்மி கட்சித் தொண்டா்களும், உயிரிழந்த இளைஞரின் நினைவாக மெழுகுவா்த்தி ஏற்றி வைக்க குழியை நோக்கி நடக்க முயன்றனா். அப்போது அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
ஆம் ஆத்மி தலைவா்கள் போராட்டம் நடத்த முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘அவா்கள் சம்பவ இடத்திலிருந்து அகற்றப்பட்டு கைது செய்யப்பட்டனா். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்‘ என்று அவா் கூறினாா்.
பின்னா், எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், கமல் தியானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க தானும் தனது தொண்டா்களும் சென்றதாக சௌரப் பரத்வாஜ் கூறினாா். ‘காவல்துறையினா் தடுப்புகளை அமைத்தனா். எந்த கோஷமும் எழுப்பப்படவில்லை என்றும், மெழுகுவா்த்தியை ஏற்றிவிட்டு நாங்கள் திரும்புவோம் என்றும் நாங்கள் கூறினோம்’ என்று அவா் கூறினாா்.
இரங்கல் தெரிவிப்பது குற்றமா என்று கேட்ட சௌரப் பரத்வாஜ், மற்றொரு பதிவில் தான் ‘கைது’ செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினாா்.

