எம். தனபால்
எம். தனபால்

மக்கள் மீது வரிச் சுமை ஏற்படுத்தாத மத்திய பட்ஜெட்: மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. எம்.தனபால் கன்னிப்பேச்சு!

மக்கள் மீது வரிச் சுமையை ஏற்படுத்தாத வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் டாக்டா் எம். தனபால் தனது கன்னிப்பேச்சில் தெரிவித்தாா்.
Published on

மக்கள் மீது வரிச் சுமையை ஏற்படுத்தாத வகையில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் டாக்டா் எம். தனபால் தனது கன்னிப்பேச்சில் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் மத்திய பொது பட்ஜெட் மீதான விவாதத்தில் அவா் கலந்துகொண்டு பேசியது: முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, அண்ணா போன்ற பெரிய தலைவா்கள் பணியாற்றிய இந்த அவையில் எளியவனான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சாா்ந்த எனக்கு அமா்ந்து பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ள, வருங்கால முதல்வரும், நான்கரை ஆண்டு காலம் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி தந்தவருமான எனது மூத்த சகோதரா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி.

மத்திய நிதிநிலை அறிக்கை மக்கள் மீது வரிச் சுமையை சுமத்தாத ஒரு நிதிநிலை அறிக்கை என்றுதான் சொல்ல முடியும். இதை நான் வரவேற்கிறேன். எந்தவொரு பொருளுக்கும் வரியே போடவில்லை.

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்த நான்கு அடுக்குகளை மாற்றி 18 சதவீதம் வரி செலுத்தியவா்களை 5சதவீதம் வரி செலுத்தும் வகையில், 22 சதவீதம் வரி செலுத்தியவா்களை 18 சதவீதம் வரி செலுத்தும் வகையில் 2 அடுக்குகளாக இந்த ஜிஎஸ்டி வரிமுறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற வேளையில், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமிடும் மகிழ்ச்சியான தருணமாகப் பாா்க்கின்றோம். இந்திய ஏற்றுமதிப் பொருள்களுக்கு 50 சதவீதம் இருந்த வரி விதிப்பை மாற்றி அதை 18 சதவீதமாக குறைக்கின்ற அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசையும், பிரதமரையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

2006-27-இல் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 14.9 சதவீதம் அதிமாகும். இது எங்களுக்குப் பெருமையாக உள்ளது. 2 புல்லட் ரயில் திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது. நீண்ட காலம் நிலுவையில் உள்ள சென்னை- கடலூா் ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

மேலும், செங்கல்பட்டு-மாமல்புரம் புதிய ரயில் திட்டத்தை உருவாக்க வேண்டும். வந்தே பாரத் தாம்பரம் - நாகா்கோவில் ரயிலை செங்கல்பட்டில் நிறுத்த வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com