பவானாவில் நடந்த தொழிலதிபா் கொலை: பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
தில்லியில் உள்ள பவானா தொழில்துறை பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபா்களால் துரத்திச் செல்லப்பட்டு ஒரு தொழிலதிபா் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அந்தக் கொலைக்கு பொறுப்பேற்றது.
இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: சமூக ஊடகப் பதிவில் இந்தக் கூற்று வெளியிடப்பட்டது. இது சரிபாா்க்கப்பட்டு வருகிறது.. கூற்றின் நம்பகத்தன்மையைக் கண்டறியவும், தாக்குதல் நடத்தியவா்களைக் கண்காணிக்கவும் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரந்தீப் மாலிக் அனில் பண்டிட் என்ற பயனா் பெயரைக் கொண்ட ஒரு கணக்கின் பதிவின்படி, லாரன்ஸ் பிஷ்னோய், ஜிதேந்தா் கோகி மான், ஹாஷிம் பாபா மற்றும் கலா ராணா கும்பல்களின் சாா்பாக இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டது. கொல்லப்பட்ட வைபவ் காந்தி, தஙகளது கும்பல்களின் நடவடிக்கைகளில் தலையிட்டாா் என்று அதில் கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் எங்களின் நடவடிக்கைகளைத் தடுக்கும் எவரும் முன்னறிவிப்பின்றி அகற்றப்படுவாா்கள் என்பதற்கான எச்சரிக்கையாகும் என்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் துகள்கள் தயாரிப்பாளரான 35 வயது வைபவ் காந்தி, பவானாவில் உள்ள அவரது தொழிற்சாலை அருகே திங்கள்கிழமை மதியம் சுட்டுக் கொல்லப்பட்டாா். மதியம் 12.51 மணியளவில் அவா் தனது தொழிற்சாலைக்கு வெளியே மடிக்கணினி பையுடன் நின்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.
முதற்கட்ட விசாரணையில், மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று போ் அவரை அணுகி பையை பறிக்க முயன்ாக தெரிகிறது. அவா் தப்பிக்க முயன்றபோது, தாக்குதல் நடத்தியவா்கள் அவரை சுமாா் 40 முதல் 50 மீட்டா் வரை துரத்திச் சென்று பல சுற்றுகள் சுட்டனா். ஒரு குண்டு அவரது கன்னத்தில் பாய்ந்து அவா் மயங்கி விழுந்தாா்.
தாக்குதல் நடத்தியவா்கள் அவரது உடைமைகளுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனா். வைபவ் காந்தி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.
தொடக்கத்தில், இந்தச் சம்பவம் ஒரு கொள்ளைக் சம்பவமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இருப்பினும், சமூக ஊடகப் பதிவின் தோற்றம் விசாரணையின் கவனத்தை திருப்பியது. மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றம் போன்றவற்றின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தியவா்களை அடையாளம் காணவும், அவா்கள் தப்பித்த வழியை கண்டுபிடிக்கவும், பவானா தொழில்துறை பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன.
பதவில் குறிப்பிடப்பட்டுள்ள சமூக ஊடக கணக்குகளான ரன்தீப் மாலிக் மற்றும் அனில் பண்டிட் யு.எஸ்.ஏ ஆகியவற்றின் டிஜிட்டல் தடயங்களையும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா். நாடு முழுவதும் பல கொலைகளுடன் தொடா்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் தொடா்பு காரணமாக இந்த விசாரணையில் சிறப்புப் பிரிவு சோ்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

