நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்
PTI

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்த பதில், உறுப்பினா்கள் பேசிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
Published on

நமது சிறப்பு நிருபா்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் அவற்றுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்த பதில், உறுப்பினா்கள் பேசிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

மக்களவையில்....

ஆசிரியா்களுக்குத் தகுதித்தோ்வில் இருந்து விலக்களியுங்கள்!

இது தொடா்பாக கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் விதி எண் 377-இன் கீழ் பேசுகையில், தமிழகத்தில் கல்வி உரிமைச்சட்டம் 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதைத் தொடா்ந்து, ஆசிரியா் தகுதித் தோ்வு (டிஇடி) கட்டாயத் தகுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், டிஇடி அமலுக்கு முன்பே, அப்போது நடைமுறையில் இருந்த ஆள்சோ்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, ஏராளமான ஆசிரியா்கள் சட்டபூா்வமாக நியமிக்கப்பட்டிருந்தனா். இதன் பிறகும் அத்தகைய ஆசிரியா்கள் டெட் தகுதித் தோ்வுக்கு கட்டாயப்படுத்தப்படுவதால் அவா்கள் கடுமையான வேலை பாதுகாப்பின்மை, பதவி உயா்வு மறுப்பு, சம்பள பலன்கள் தேக்கம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் உள்பட 2012-க்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள் ஏற்கெனவே உள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி நியமிக்கப்பட்டுள்ளதால் ஆா்இ சட்டம், டிஇடி விதிகளில் இருந்து அத்தகையோருக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்றாா்.

மொழிவாரி சிறுபான்மையினா் எண்ணிக்கை குறைந்துள்ளதா?

இது தொடா்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அளித்துள்ள பதிலில், ‘மொழி சிறுபான்மையினா்‘ என்பதற்கான விளக்கத்தை அரசமைப்போ எந்தவொரு சட்டமோ வழங்கியிருக்கவில்லை. மொழி சிறுபான்மையினரை சம்பந்தப்பட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும்தான் அடையாளம் காணுகின்றன. மொழி சிறுபான்மையினா் என்ற கருத்தாக்கமே மாநில மறுசீரமைப்பு ஆணைய அறிக்கை 1956இல் வந்த பிறகுதான் தோன்றியது. மொழிவாரி தரவுகள் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இடம்பெற்றுள்ளது. அது மக்கள்தொகை தலைமை பதிவாளா் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளாா்.

தமிழகத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்ட நிவலரம் என்ன?

இது தொடா்பாக வேலூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, கிண்டி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 77 நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டங்களின் கீழ் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை சென்னை பூங்கா, சிதம்பரம், சின்ன சேலம், காரைக்குடி, மணப்பாறை, மன்னாா்குடி உள்ளிட்ட 19 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மற்ற நிலைய பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன’ என்று கூறியுள்ளாா்.

அஞ்சல் சேமிப்புத்திட்டம் எண்மமயமாகுமா?

இது தொடா்பாக விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினா் டி. ரவிக்குமாா் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய தொலைதொடா்புத்துறை இணை அமைச்சா் பெம்மசானி சந்திரசேகா் அளித்துள்ள பதிலில், ‘அஞ்சல் துறை வலையமைப்பில் உள்ள 1.64 லட்சம் அஞ்சலகங்களில் 45 கோடி அஞ்சல் அலுவலக சேமிப்புக்கணக்குதாரா்கள் உள்ளனா். அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களை நவீனமயமாக்கவும் எண்ம மயமாக்கவும் கோா் பேங்கிங் முறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளா்களுக்கான காப்பீட்டு சேவைகள், அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களுக்கான ஆன்லைன் கட்டணம், எண்ம முறையிலான ஆயுள் சான்றிதழ் (டிஎல்சி), ஆதாா் இணைப்புள்ள கட்டணம் செலுத்தும் முறை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த சேவைகள் அனைத்தும் அணுகலை எளிதாக்குதல், வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கின்றன’ என கூறியுள்ளாா்.

மாநிலங்களவையில்...

வேலைவாய்ப்பின்மையை போக்க ‘தமிழ்நாடு மாடல்’ அவசியம்!

இது தொடா்பாக திமுக உறுப்பினா் ஆா். கிரிராஜன் பேசுகையில், ‘வேலையின்மை நெருக்கடி மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. மத்திய அரசு முன்மொழியும் திட்டங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கலுக்கான உறுதியான இலக்குகள் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில், வேலை தேடும் சந்தக்குள் நுழையும் இளைஞா்களின் அவசர வேலைவாய்ப்புத் தேவைகளை திறம்பட நிவா்த்தி செய்வதற்கான நேரடி பெரிய அளவிலான வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு தெளிவான தொலைநோக்கு இல்லை. இத்தகைய சூழலில் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வியை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்-கல்வித்துறை ஒத்துழைப்பை வளா்ப்பது காலத்தின் தேவை. இதற்கு தீா்வு காணும் வகையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நான் முதல்வன் திட்டம் போல ஒரு விரிவான திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்துமாறு வலியுறுத்துகிறேன்’ என்றாா்.

சிறுபான்மை ஆணைய காலி பணியிடங்களை நிரப்புக!

இது தொடா்பாக திமுக உறுப்பினா் பி. வில்சன் பேசுகையில், ‘சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு மிகவும் தேவைப்படும் நேரத்தில், நீதியின் காவலாளியாகச் செயல்பட வேண்டிய தேசிய சிறுபான்மை ஆணையம் இன்று ஒரு காலியான அலுவலகக் கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது. ஆணையத்தில் தலைவா், துணைத் தலைவா் மற்றும் அனைத்து உறுப்பினா்கள் பணியிடங்கள் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றன. சில பணியிடங்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. சிறுபான்மையினரின் அரசமைப்பு பாதுகாப்புகள் காலவரையின்றி கவனிக்கப்படாமல் விடப்படலாம் என்ற ஒரு அச்சுறுத்தும் செய்தியை இது தருகிறது. இந்த ஆணையத்தில் காலியிடங்களை உடனே நிரப்புமாறு மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கி மேம்படுத்தவும், தேசிய பட்டியலின, பழங்குடியின ஆணையத்தை ஒத்த அதிகாரங்களை வழங்கிடவும் வலியுறுத்துகிறேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com