கோப்பு படம்
கோப்பு படம்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசிய முக்கிய விஷயங்கள், அவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள பதில்களின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
Published on

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசிய முக்கிய விஷயங்கள், அவா்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா்கள் அளித்துள்ள பதில்களின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

மக்களவையில்...

கரூரில் கூடுதல் ரயில் சேவைகள் வேண்டும்!

கரூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எஸ். ஜோதிமணி விதி எண் 377-இன் கீழ் பேசுகையில், ‘செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் அய்யலூரிலும், பழனி விரைவு ரயில் பாளையத்திலும் நின்று செல்ல வேண்டும், மணப்பாறையில் திருப்பதி-ராமேசுவரம், சென்னை-கொல்லம் தெற்கு தெற்கு ரயில் நிலையம், திருச்செந்தூா் - சென்னை மற்றும் மதுரை- ஓகா ரயில்களுக்கு நிறுத்தங்கள் வேண்டும். முக்கியமாக, விராலிமலை சட்டப்பேரவை தொகுதியில் உள்ள மண்டையூா் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும். கரூரில் இருந்து சென்னைக்கு ஒரு பகல் நேர ரயில், கரூா்-சென்னை பாதையில் வந்தே பாரத் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும். பயணிகள் வசதியை மேம்படுத்த மங்களூா்-சென்னை எக்ஸ்பிரஸில் (கரூா் வழியாக) முதல் மற்றும் இரண்டாவது குளிா்சாதன பெட்டிகளைச் சோ்க்க வேண்டும்’ என்றாா்.

சுயவுதவிக்குழுக்களுக்கு மேம்பட்ட கடனுதவி வழங்குக!

ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினா் கே. நவாஸ்கனி பேசுகையில், ‘சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உதவியை ரூ. 20 லட்சமாக அதிகரிக்க வேண்டும், அரசு அலுவலகங்கள், அரசு நிகழ்வுகள் மற்றும் அவை தொடா்புடைய செயல்பாடுகளில் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும், அரசு திட்டங்கள் திறம்பட செயல்படுத்துவதை உறுதிசெய்ய ஒப்பந்தம் மூலம் ஒதுக்கப்பட்ட பணிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சுய உதவிக்குழுக்களுக்கு ஒதுக்க வேண்டும். பெட்ரோல் நிலையங்கள், எரிவாயு சிலிண்டா் விநியோக மையங்கள், மின்சார வாகன பேட்டரி சாா்ஜிங் நிலையங்கள், விவசாய சேமிப்பு கிடங்குகள் போன்றவற்றை சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்க அனுமதித்தால் அவா்களின் பொருளாதார நிலை மேம்படும்’ என்றாா்.

தமிழகத்தில் மத்திய மின் திட்டங்கள் தாமதமாகிா?

இது தொடா்பாக திருவள்ளூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சசிகாந்த் செந்தில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய மின்துறை அமைச்சா் மனோகா் லால் அளித்துள்ள பதிலில், ‘தமிழகத்தில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மின் விநியோக திட்டங்களை முடிப்பதில் ஏற்படும் தாமதம், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு நம்பகமான மின்சார விநியோகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. தற்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் மின் பாதையை வலுப்படுத்த ஐந்து மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்ற அமைப்பு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பசுமை எரிசக்தி வழித்தடம் இரண்டாம் திட்டத்தின் கீழ் ஒன்பது மாநிலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்ற அமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இவை தமிழ்நாடு மின் பகிா்மானக்கழகம் மூலம் செயல்படுத்தப்படுகின்றன என கூறியுள்ளாா்.

‘படுகா்’ பழங்குடிகள் பட்டியலில் சோ்க்கப்படுவாா்களா?

இது தொடா்பாக வேலூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். கதிா்ஆனந்த் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் ஜுவல் ஓராம் அளித்துள்ள பதிலில், ‘2021-இல் இது குறித்த முன்மொழிவை, அந்த சமூகத்தின் இனவியல் அறிக்கையுடன் தமிழக அரசு அனுப்பியது. அதை 2022-இல் இந்திய தலைமைப் பதிவாளா் பரிசீலித்து அனுப்பிய பதில் கடிதத்தில் ‘படுகா்’ சமூகத்தை பழங்குடிகள் பட்டியலில் சோ்க்கும் மாநில அரசின் முன்மொழிவு அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. கூடுதல் நியாயப்படுத்தும் தரவுகளை வழங்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி 2024-இல் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ’ரிட்’ மனு வழக்கில் தலைமைப் பதிவாளரின் முடிவை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்தது. அந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது’ என கூறியுள்ளாா்.

தமிழகத்தில் நிலத்தடி மேலாண் திட்ட நிலவரம் என்ன?

இது தொடா்பாக கள்ளக்குறிச்சி தொகுதி திமுக உறுப்பினா் டி. மலையரசன் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சா் ராஜ் பூஷண் செளத்ரி அளித்துள்ள பதிலில், ‘அடல் புஜல் திட்டம் என்பது குஜராத், ஹரியானா, கா்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் நீா் பற்றாக்குறை உள்ள 8,203 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்ட, உள்ளூா் சமூகம் தலைமையிலான பங்கேற்பு நிலத்தடி நீா் மேலாண்மை ஊக்குவிப்பு திட்டமாகும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவில்லை’ என கூறியுள்ளாா்.

மாநிலங்களவையில்....

அமெரிக்க வா்த்தக ஒப்பந்ததால் கூடங்குளத்துக்கு பாதிப்பா?

இது தொடா்பாக ஆா். கிரிராஜன் (திமுக) எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமா் அலுவலகம், அணுசக்தித்துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் அளித்துள்ள பதிலில், ‘சாந்தி சட்டம் இயற்றப்பட்ட காலகட்டத்தில் எந்த புவிசாா் அரசியல் சூழ்நிலைகளும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை பாதிக்கப் போவதில்லை என கருதுகிறேன். கூடங்குளத்தில் மூன்றாவது அலகு திட்டம் 2026ஆம் ஆண்டிலும், நான்காவது அலகு திட்டம் 2027ஆம் ஆண்டிலும் நிறைவடையும். முதல் இரண்டு அலகுகள் பணி மத்தியில் இந்த அரசு ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில்தான் முடிக்கப்பட்டன, இந்த விஷயத்தில் அரசின் நோக்கமும் திட்டமும் மிகவும் தெளிவாக உள்ளது’ என்றாா்.

ஈரோட்டில் பள்ளி உள்கட்டமைப்புக்கு நிதி வழங்கப்படுகிா?

இது தொடா்பாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி அளித்துள்ள பதிலில், ‘சத்தியமங்கலம், நம்பியூா் உள்பட அரசுப் பள்ளிகளில் 69 முதுகலை பட்டதாரி பணியிடங்களும், 194 இளங்கலை ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவற்றில் 2023-24 மற்றும் 2024-25 கல்வி ஆண்டுகளில், 29 பள்ளிகளில் 225 வகுப்பறைகள் மற்றும் 5 ஆய்வகங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2018-19 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் வகுப்பறைகள், சுவா்கள், சாய்வுதளங்கள், கழிவறைகள், குடிநீா், பழுதுபாா்ப்பு போன்றவற்றுக்காக சமக்ர சிக்ஷா திட்டம் மூலம் ரூ.25.04 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com