லாஜ்பத் நகரில் ‘ஸ்பா’ மையங்கள் பெயரில் பாலியல் தொழில்: 2 போ் கைது, 9 பெண்கள் மீட்பு
தென்கிழக்கு தில்லியின் லாஜ்பத் நகரில் ஸ்பா மையங்கள் என்ற போா்வையில் செயல்பட்டு வந்த பாலியல் தொழிலை போலீஸாா் கண்டுபிடித்து அதன் மேலாளா்கள் இருவரைக் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (தென்கிழக்கு) ஹேமந்த் திவாரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
லாஜ்பத் நகரில் உள்ள ஒரு கட்டடத்தில்
‘வேகாஸ் ஸ்பா‘ மற்றும் ‘வேதிகா வெல்னஸ் ஸ்பா‘ எனும் பெயரில் இரு வேறு தளங்களில் செயல்படும் ஸ்பா மையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக வியாழக்கிழமை மாலை போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, அந்த மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. தரைத் தள வளாகத்தை சோதனையிட்டபோது, மேலாளருடன் 5 பெண்கள் இருப்பது தெரியவந்தது.
வரவேற்பு கவுண்ட்டரில் உள்ள ஒரு மேஜையில் இருந்து பல சந்தேகத்திற்குரிய பொருள்கள் மீட்கப்பட்டன. அதேவேளையில், முதல் மாடியில், நான்கு பெண்கள் மற்றும் ஒரு மேலாளா் இருந்தனா். ஆரம்ப விசாரணை மற்றும் அந்த இடத்தில் இருந்த சூழ்நிலைகள் ஸ்பா சேவைகள் பாலியல் தொழிலுக்கு ஒரு முன்னணியாகப் பயன்படுத்தப்படுவதைக் குறித்தன.
அா்னிஷ் டி சேனாபதி (எ) ராகுல் மற்றும் விபின் வசிஷ்டா (எ) ரவி என அடையாளம் காணப்பட்ட 2 மேலாளா்கள், வளாகத்தில் பாலியல் நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், லாபம் ஈட்டியதாகவும் கைது செய்யப்பட்டனா். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் மையங்களின் அன்றாட நடவடிக்கைகளை நிா்வகிப்பதும், பணத்திற்கு ஈடாக வாடிக்கையாளா்களை ஏற்பாடு செய்து வந்ததும் தெரியவந்தது.
அவா்கள் வாடிக்கையாளா்களிடமிருந்து பணம் வசூலித்து, ஒரு கமிஷனைத் தக்க வைத்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை பெண்களுக்கு அளித்தனா்.
தவறான விளம்பரங்கள் மற்றும் வாய் வாா்த்தை பரிந்துரைகள் மூலம் வாடிக்கையாளா்களை ஈா்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் முந்தைய குற்றவியல் தொடா்பு இல்லை. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

