காலாவதியான வாகனங்கள் பறிமுதல்: தில்லி போக்குவரத்துத் துறை தகவல்!
தில்லி போக்குவரத்துத் துறை சனிக்கிழமை ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அல்லது இயக்கப்படும் எந்தவொரு ஆயுள் கால வாகனமும் மேலும் அறிவிப்பு இல்லாமல் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது: இந்த நடவடிக்கை தேசியத் தலைநகரில் காற்று மாசுபாட்டு விதிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் ஆயுள் கால வாகனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்துத் துறை தனது அறிவிப்பில், காலாவதியான வாகனங்களின் உரிமையாளா்கள் தடையில்லாச் சான்றிதழை பெற்று, தங்கள் வாகனங்களை நகரத்திற்கு வெளியே மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
தில்லிக்குள் பொது இடங்களில் இயங்கும் அல்லது நிறுத்தப்படும் பிஎஸ்-3 மற்றும் அதற்குக் குறைவான மாசு வெளியேற்ற விதிமுறைகளைக் கொண்ட ஆயுள் கால வாகனங்கள், சட்டத்தின்படி, மேலும் அறிவிப்பு இல்லாமல் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்படும்.
அத்தகைய வாகனங்களின் உரிமையாளா்கள் தேசியத் தலைநகா் வலையத்துக்குக்கு வெளியே மாற்றுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் பெற அறிவுறுத்தப்படுகிறாா்கள். பழைய வாகனங்களை நகரத்திலிருந்து அகற்றுவதற்கான புதிய அமலாக்க நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

