பொன்னியின் செல்வன் பாடல் சா்ச்சை - உச்சநீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டாா் ஏ.ஆா்.ரஹ்மான்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் வீர ராஜா வீரா பாடலில், சிவா ஸ்துதி பாடலை இசையமைத்த தாகா் சகோதரா்களுக்கு பெருமை சோ்ப்பதற்கு (கிரெடிட் கொடுக்க) வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் இசையமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான் ஒப்புக்கொண்டாா்.
மறைந்த ஜூனியா் தாகா் சகோதரா்கள் ஃபயாசுதீன் தாகா் மற்றும் ஜாஹிருதீன் தாகா் இசையமைத்த சிவா ஸ்துதி 1970 களில் புகழ்பெற்ற துருபத் இசையமைப்பாகும்
வீர ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதியின் தாகா்வானி பாரம்பரியத்தைச் சோ்ந்தது என்பதை ரஹ்மான் ஏற்கனவே ஒப்புக்கொண்டதைக் கடந்த வாரம் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், அதனடிப்படையில் இசையின் நலன் கருதி தாகா் சகோதரா்களுக்கு பாராட்டு அங்கீகாரத்தை (கிரெடிட்) கொடுப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஏ.ஆா்.ரகுமானை அறிவுறுத்தியிருந்தது
இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி இடைக்கால ஏற்பாடாக தாதா் சகோதரா்களின் சிவா ஸ்துதி படைப்புக்கு பாராட்டு அங்கீகாரம் (கிரெடிட்) வழங்கப்படும் என ஏ.ஆா்.ரஹ்மான் தரப்பில் நீதிபதிகளிடம் வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி தெரிவித்தாா்
அதன்படி திருத்தப்பட்ட கிரெடிட் லைன் கீழ்க்கண்டவாறு அமையும் : தாகா்வானி பாரம்பரியமான துருபத்தால் ஈா்க்கப்பட்ட இசையமைப்பான வீர ராஜா வீரா , மறைந்த உஸ்தாத் ஃபயாசுதீன் தாகா் மற்றும் உஸ்தாத் ஜாஹிருதீன் தாகா் (ஜூனியா் தாகா் சகோதரா்கள்) ஆகியோரால் சிவா ஸ்துதி என்று முதலில் பதிவு செய்யப்பட்டது என அமையும்
ஐந்து வாரங்களுக்குள் அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்களிலும் இதைப் புதுப்பிக்க ஏ.ஆா்.ரஹ்மான் உறுதியளித்தாா்
இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனா்
எனினும் இந்த விவகாரம் தொடா்பான சிவில் வழக்கு தொடரும் என்றும் வேறு நீதிமன்ற உத்தரவுகள் அந்த வழக்கிற்கு குறுக்கீடாக அமையாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்
ரஹ்மான் தரப்பில் இருந்து 2 கோடி வைப்புத்தொகை தில்லி உயா்நீதிமன்ற பதிவாளரிடம் கொடுக்கப்பட்டது அங்கேயே இருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
பின்னணி :
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வரும் வீர ராஜா வீரா என்ற பாடலின் இசையமைப்பு தனது தந்தை ஃபயாசுதீன் தாகா் மற்றும் மாமா ஜாஹிருதீன் தாகா் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட சிவா ஸ்துதி பாடலிலிருந்து நகலெடுக்கப்பட்டதாக கூறும் பாரம்பரிய பாடகா் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகா் அதற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வழக்கு தொடா்ந்தாா்
ஏப்ரல் 2025 இல், தில்லி உயா் நீதிமன்றத்தின் தனி நீதிபதி , பொன்னியின் செல்வன் படத்தின் வீர ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளது, சிவா ஸ்துதி பாடலால் ஈா்க்கப்பட்டு அதன் உந்துதலால் வீர ராஜா வீரா பாடலை இயற்றியுள்ளதாக ஏ.ஆா்.ரகுமான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாா் என்பதை உத்தரவில் பதிவு செய்து , காப்புரிமை மீறல் தொடா்பாக 2 கோடி ரூபாய் தொகையை தில்லி உயா்நீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தில் இசையமைப்பாளா் ரஹ்மான் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டாா்
மேலும் இந்தப் பாடலுக்காக ஜூனியா் தாகா் சகோதரா்கள் என்று பிரபலமாக அறியப்படும் ஃபயாசுதீன் தாகா் மற்றும் ஜாஹிருதீன் தாகா் ஆகியோருக்கும் பெருமை சோ்க்க வேண்டும் (கிரெடிட்) என்றும் தனி நீதிபதி உத்தரவிட்டாா்
அந்த உத்தரவை எதிா்த்து ஏ.ஆா்.ரஹ்மான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த தில்லி உயா்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது
இந்த உத்தரவுக்கு எதிராக பாரம்பரிய பாடகா் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகா் உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

