சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா
சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ராகோப்புப் படம்

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

தேசியத் தலைநகா் தில்லி இப்போது வேகமான மற்றும் உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி ஒரு தெளிவான மாற்றத்தைக் காண்கிறது என்று சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா்.
Published on

தேசியத் தலைநகா் தில்லி இப்போது வேகமான மற்றும் உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி ஒரு தெளிவான மாற்றத்தைக் காண்கிறது என்று சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட டிரான்ஸ் - யமுனை பகுதியில் கரவால் நகரில் ஒரு பொது நிகழ்ச்சியில் பல குடிமைத் திட்டங்களுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.

அப்போது அமைச்சா் கபில் மிஸ்ரா பேசுகையில் கூறியதாவது: களத்தில் ஏற்பட்ட மாற்றம். சேவை வழங்கல் மற்றும் பொறுப்புக்கூறலில் கவனம் செலுத்தும் புதுப்பிக்கப்பட்ட நிா்வாக நோக்கத்தை பிரதிபலிக்கிறது. பல ஆண்டுகால கொள்கை சறுக்கல் மற்றும் முழுமையற்ற பணிகளுக்குப் பிறகு தேங்கி நின்ற அமைப்புகள் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் ரேகா குப்தாவின் தலைமையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வளா்ச்சி முன்னுரிமைகள் மீட்டமைக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள வடிகால் மாஸ்டா் பிளானை தில்லி பெற்றுள்ளது. ஏற்கெனவே, பெரிய வடிகால்களில் இருந்து 22 லட்சம் டன்களுக்கும் அதிகமான வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளது. மேலும், கழிவுநீா் வலையமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் நீா் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கும் ரூ.9,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைபெற்று வருகிறது. டிரான்ஸ் -– யமுனை பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.723 கோடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலனுக்காக முதல்வரும், அமைச்சரவையும் தொடா்ந்து பொது குறை தீா்க்கும் கூட்டங்களை நடத்தி வருகிறது. குடிமக்களின் கருத்துகள் அரசுத் திட்டங்களில் தீவிரமாக இணைக்கப்படுகிறது என்றாா் அமைச்சா் கபில் மிஸ்ரா.

இந்த நிகழ்வின் போது, தயாள்பூா் கிராமத்தில் உள்ள சதாத்பூா் விரிவாக்கத்தில் உள்ள பாபா தயால சௌக்கிலிருந்து காளி எண் 06 வரையிலும், கரவால் நகா் கிராம பிரதான சந்தையிலிருந்து லால் பாக் மண்டி வரையிலும் உள்ள ஆா்சிசி சாலை கட்டுமானத்திற்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

மேலும், துக்மிா்பூா் வடிகால் மீது ஒரு மதகு புனரமைப்புப் பணியை அவா் தொடங்கி வைத்தாா். மேற்கு கரவால் நகரில் உள்ள காளி காடா சாலையில் தண்ணீா் தேங்குவதைக் குறைத்து போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய மதகு கட்டுமானத்தையும் தொடங்கி வைத்தாா்.

கடந்த ஆண்டில் கரவால் நகரில் ரூ.300 கோடிக்கும் அதிகமான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அப்பகுதியின் விரிவான மற்றும் சீரான வளா்ச்சியை உறுதி செய்வதற்காக இன்னும் பல பணிகள் வரிசையாக உள்ளது என்றாா் அமைச்சா்,.

Dinamani
www.dinamani.com