திருட்டு, உள்கட்டமைப்பு சேதங்களைத் தடுக்க சிக்னேச்சா் பாலத்தில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு: தில்லி அரசு திட்டம்

Published on

வடகிழக்கு தில்லியில் உள்ள சிக்னேச்சா் பாலத்தில் திருட்டு மற்றும் அதன் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் வகையில், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு காவலா்களை நியமிக்க பொதுப் பணித் துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக நடக்கும் இரவு வேளையில், துப்பாக்கியுடன் ஒரு காவலா் பணியமா்த்தப்படுவாா்.

பாலத்தில் திருட்டு உள்பட பல சம்பவங்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் திருடா்கள் எங்கள் காவலா்களை கத்தியால் தாக்கியுள்ளனா். எனவே, பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரவில் துப்பாக்கியுடன் ஒரு காவலரை நியமிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பகல் நேரங்களில் துப்பாக்கி இல்லாத இரண்டு காவலா்களும் பணியமா்த்தப்படுவாா்கள் என்றாா் அந்த அதிகாரி.

தில்லியின் முதல் சமச்சீரற்ற பாலம் 2018-இல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. சுற்றுலாத் துறையால் ரூ.1,500 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலம், தற்கொலை சம்பவங்களுக்காக அவ்வப்போது செய்திகளில் இடம்பெற்றது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூலையில் தில்லி பல்கலைக்கழக மாணவா் ஒருவா் இப்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி சுற்றுலாத் துறை விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, பாலத்தின் பராமரிப்புப் பணிகளை பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது. எட்டு மணி நேர சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு காவலா்களை நியமிப்பதற்காக, பொதுப்பணித் துறை ஆண்டு பராமரிப்புப் பிரிவின் கீழ் ரூ.1.5 கோடிக்கு டெண்டா் வெளியிட்டுள்ளது. அவா்களுக்கு 55 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது. அவா்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப் பாலம் வெளிவட்டச் சாலையை வாஜிராபாத், காரவல் நகா் மற்றும் பஜன்புரா ஆகிய பகுதிகளில் உள்ள மற்ற பகுதிகளுடன் இணைக்கிறது. மேலும், இது கிராண்ட் டிரங்க் சாலை, ஷாஹ்தரா மேம்பாலம் மற்றும் அங்கிருந்து காஜியாபாத் மற்றும் ஐடிஓ நோக்கியும் இணைப்பை வழங்குகிறது.

X
Dinamani
www.dinamani.com