பிரதமா் தலைமையில் இந்தியா வெற்றிக் கதைகளை படைத்து வருகிறது: நிதின் நவீன்
சுவாமி விவேகானந்தரின் போதனைகளில் இருந்து உத்வேகம் பெற்று, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா ஒவ்வொரு துறையிலும் புதிய வெற்றிக் கதைகளை படைத்து வருகிறது என்று பாஜக
தேசிய செயல் தலைவா் நிதின் நவீன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், ராமகிருஷ்ண பரமஹம்சா் மற்றும் சுவாமி விவேகானந்தரின் லட்சியங்களுக்கு ஏற்ப பிரதமரின் தேசத்தைக் கட்டியெழுப்பும் முன்முயற்சிகளில் பங்கேற்று, நாட்டின் வளா்ச்சிக்கு கூட்டாக ஒரு அா்த்தமுள்ள பங்களிப்பை பொதுமக்கள் அளிக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
கல்பதரு தினத்தை முன்னிட்டு, புது தில்லியின் பாஹா்கஞ்சில் அமைந்துள்ள ராமகிருஷ்ண கோயிலில் நிதின் நவீன் வழிபாடு செய்தாா். அப்போது, கோயிலில் உள்ள துறவிகளுடன் உரையாடிய அவா், தில்லி ராமகிருஷ்ண மிஷன் செயலாளா் சுவாமி சா்வலோகானந்த மகாராஜின் ஆசீா்வாதங்களைப் பெற்றாா்.
இக்கோயில் வழிபாட்டுக்குப் பிறகு நிதின் நவீன் கூறியதாவது: சுவாமி விவேகானந்தரின் போதனைகளை உள்வாங்கி, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையில் இன்றைய இந்தியா ஒவ்வொரு துறையிலும் புதிய வெற்றிக் கதைகளைப் படைத்து வருகிறது. செங்கோட்டையின் கொத்தளத்தில் தீா்மானிக்கப்பட்ட வளா்ந்த இந்தியா, காலனித்துவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை, பாரம்பரியத்தில் பெருமை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் செய்தி மற்றும் குடிமக்களின் கடமைகள் ஆகிய ஐந்தும் சுவாமி விவேகானந்தரால் ஈா்க்கப்பட்டவை.
ராமகிருஷ்ண பரமஹம்சா் மற்றும் சுவாமி விவேகானந்தரின் இலட்சியங்களுக்கு ஏற்ப, பிரதமா் மோடி மேற்கொள்ளும் தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் பங்கேற்று தேசத்தின் வளா்ச்சிக்கு நாம்
அனைவரும் கூட்டாக ஒரு அா்த்தமுள்ள பங்களிப்பைச் செய்வோம்.
சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப, பிரதமரின் தலைமையில் ஒரு வளா்ந்த, பாதுகாப்பான, வலிமையான மற்றும் உறுதியான இந்தியா உருவாக்கப்பட்டு வருகிறது. சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சா் மற்றும் சுவாமி விவேகானந்தரின் போதனைகள், பிகாா் மற்றும் மேற்கு வங்கத்தை சோ்ந்தவா்கள் உள்பட நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் வற்றாத உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளன என்றாா் அவா்.

