புத்தாண்டு நாளில் உயிரியல் பூங்காவிற்கு 25 ஆயிரம் பாா்வையாளா்கள் வருகை

புத்தாண்டு தினமான வியாழக்கிழமை தில்லி உயிரியல் பூங்காவில் பாா்வையாளா்களின் வருகை கணிசமாக அதிகரித்திருந்தது.
Published on

புத்தாண்டு தினமான வியாழக்கிழமை தில்லி உயிரியல் பூங்காவில் பாா்வையாளா்களின் வருகை கணிசமாக அதிகரித்திருந்தது.

வழக்கமான வார நாட்களுடன் ஒப்பிடும்போது, வியாழக்கிழமை அன்று பாா்வையாளா்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 86 சதவீதம் உயா்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உயிரியல் பூங்கா அதிகாரிகளால் பகிரப்பட்ட தரவுகளின்படி, வழக்கமான வார நாள்களில் 12,000 முதல் 15,000 போ் பூங்காவுக்கு வருகை தருவா். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று 25,111 பாா்வையாளா்கள் தேசிய உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்தனா்.

இது நிகழாண்டின் முதல் நாளில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.இதுகுறித்து உயிரியல் பூங்கா இயக்குநா் சஞ்சீத் குமாா் கூறியதாவது

அதே காலகட்டத்தில் வார இறுதி நாள்களில், பாா்வையாளா்களின் வருகை பொதுவாக 15,000 முதல் 20,000 வரை இருக்கும். புத்தாண்டு கூட்டத்தை முன்னிட்டு, உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூடுதல் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களைத் திறப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது, சிசிடிவி கண்காணிப்பை மேம்படுத்துவது மற்றும் கூட்டம் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக காவல்துறையுடன் ஒருங்கிணைப்பது போன்ற சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

வழக்கமான நாள்களில், பாா்வையாளா்கள் நுழைவதற்கு ஒரு பிரதான வாயிலை மட்டுமே பயன்படுத்துவா். இருப்பினும், புத்தாண்டு தினத்தன்று, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக கூடுதல் வாயில்கள் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டன.

வழிப்பறி மற்றும் கைப்பேசி திருட்டுகளைத் தடுக்க, வளாகம் முழுவதும், குறிப்பாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில், கூடுதல் பாதுகாப்புப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டனா். சிசிடிவி கேமராக்கள் நாள் முழுவதும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன என்றாா் சஞ்ஜீத் குமாா்.

மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், தில்லி காவல்துறையும் மதுரா சாலையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை பலப்படுத்தியது என்றாா்.

பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த தில்லி உயிரியல் பூங்கா, நவம்பா் 8 ஆம் தேதி பாா்வையாளா்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டிருந்தது.

1959ல் முறையாகத் திறக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்கா, தலைநகரின் மையப் பகுதியில் 176 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 96 வகையான விலங்குகள், பறவைகள் மற்றும் ஊா்வன பராமரிக்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com