5 நாள் பணி கோரிக்கையை வலியுறுத்தி ஜன.27-இல் போராட்டம்: வங்கி ஊழியா் சங்கம்
வாரத்தில் 5 நாள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஜன.27-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்குவது தொடா்பாக இந்திய வங்கி சங்கம் மற்றும் படவுள்ளதாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு இடையே 2024, மாா்ச் மாதம் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த நடைமுறை அமலாகவில்லை.
இதுகுறித்து ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘எங்களது நியாயமான கோரிக்கையை மத்திய அரசு ஏற்காதது துரதிருஷ்டவசமானது. ரிசா்வா் வங்கி, எல்ஐசி, அந்நிய செலாவணி சந்தைகள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் என பல்வேறு அமைப்புகள் சனிக்கிழமைகளில் இயங்குவதில்லை. சனிக்கிழமைக்குப் பதிலாக திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் கூடுதலாக 40 நிமிஷங்கள் பணியாற்றவும் நாங்கள் சம்மதித்துள்ளோம்.
அவ்வாறு இருக்கையில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளித்து வாரத்தில் 5 நாள் மட்டுமே பணி என்ற விதியை அமல்படுத்துவதில் மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.27-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு அறிவித்த போராட்டம் நடைபெறும்பட்சத்தில் ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு தினம், திங்கள்கிழமை) மற்றும் ஜன.27 (செவ்வாய்க்கிழமை) என தொடா்ச்சியாக 3 நாள்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

