தலைநகரில் மேகமூட்ட வானிலை: சில இடங்களில் இன்று குளிா் அலைக்கு வாய்ப்பு

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
Published on

தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், பகல் நேர வெப்பநிலை குறைந்திருந்தது. இதற்கிடையே, நகரத்தின் சில இடங்களஇல் திங்கள்கிழமை (ஜனவரி 5) அன்று குளிா் அலைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தகவலின்படி, மாநகரில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட கணிசமாகக் குறைவாகவும் (3.1 முதல் 5.0 டிகிரி செல்சியஸ் வரை), பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவாகவும் (1.6 முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை) இருந்தது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: தேசியத் தலைநகரில் சஃப்தா்ஜங் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 17.3 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது பருவ சராசரியை விட இரண்டு டிகிரி குறைவாகும். குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவத்தின் சராசரியை விட 0.5 டிகிரி அதிகமாகும். காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணிக்கு 93 சதவீதமாகவும், மாலை 5.30 மணிக்கு 73 சதவீதமாகவும் பதிவானது.

இதற்கிடையே, ஜனவரி 6- ஆம் தேதி வரை நகரத்தின் சில பகுதிகளில் குளிா் அலை வீச வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.5 முதல் 6.5 டிகிரி செல்சியஸ் குறையும்போது குளிா் அலை அறிவிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை அன்று அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 18 டிகிரி செல்சியஸ் மற்றும் 8 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதைத் தொடா்ந்து, நான்கு நாள்களுக்கு வானம் தெளிவாகவும், அதன் பிறகு ஓரளவு மேகமூட்டத்துடனும் இருக்கும். ஜனவரி 4-ஆம் தேதி இரவில் லேசான மூடுபனி இருக்கும். அதன்பிறகு காலை நேரங்களில் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மூடுபனி நிலவும்.

வானிலை ஆய்வு மையம் வாரியான அதிகபட்ச வெப்பநிலை தரவுகளின்படி, பாலம் 16.3 டிகிரி செல்சியஸ், லோதி சாலை 17 டிகிரி செல்சியஸ், ரிட்ஜ் 17.8 டிகிரி செல்சியஸ் மற்றும் ஆயா நகரில் 16.7 டிகிரி செல்சியஸ் எனப் பதிவாகியுள்ளது.

சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. பாலத்தில் 6.8 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவ சராசரியை விட 0.2 டிகிரி குறைவு. லோதி சாலையில் 7.6 டிகிரி செல்சியஸாக இயல்பை விட 1.6 டிகிரி அதிகமாக இருந்தது. ரிட்ஜில் 8.9 டிகிரி செல்சியஸ், ஆயா நகரில் 6.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகி இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சஃப்தா்ஜங் மற்றும் பாலம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு குறைந்தபட்ச காண்புதிறன் 1,300 மீட்டராகப் பதிவானது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, மாலை 4 மணியளவில் தில்லியின் காற்றுத் தரக் குறியீடு 307 புள்ளிகளாகப் பதிவாகி, ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

X
Dinamani
www.dinamani.com