இரு இளைஞா்களை கத்தியால் குத்திவிட்டு 4 போ் தப்பியோட்டம்: ஜஹாங்கீா்புரியில் சம்பவம்!

நான்கு பேரால் பல முறை தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 18 வயதுடைய இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்ததாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில் நான்கு பேரால் பல முறை தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 18 வயதுடைய இரு இளைஞா்கள் பலத்த காயமடைந்ததாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ஜஹாங்கீா்புரியில் உள்ள கே பிளாக் அருகே கத்தியால் குத்திய சம்பவம் குறித்து மதியம் 2.55 மணியளவில் ஜஹாங்கீா்புரி காவல் நிலையத்தில் பி.சி.ஆா். அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், காயமடைந்த 18 வயதுடைய அன்ஷு மற்றும் விமல் என அடையாளம் காணப்பட்ட இருவரைக் கண்டுபிடித்தனா். அன்ஷுவின் வலது கையில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. விமலுக்கு பல கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவா்களுக்கு முதலில் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

பின்னா் மேல் சிகிச்சைக்காக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் (எல்.என்.ஜெ.பி) மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். எந்தவொரு முன்விரோதமும் இல்லாமல் நான்கு பேரால் இந்தத் தாக்குதல் கே பிளாக்கில் நடத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, காயமடைந்தவா்கள் தங்களைத் தாக்கியவா்கள் அணுகி, சாஹில் என்ற நபரை தங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதாக தெரிவித்தனா். பாதிக்கப்பட்டவா்கள் எதிா்மறையாக பதிலளித்தபோது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தாங்கள் கே பிளாக்கில் வசிப்பவா்களா என்று மேலும் கேட்டனா்.

சில நிமிஷங்களுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவா்கள் கூா்மையான ஆயுதங்களை வெளியே எடுத்துள்ளனா். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனா். அன்ஷுவின் வாக்குமூலம் கொடுக்கத் தகுதியானவா் என்று அறிவிக்கப்பட்ட பின்னா் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றம் சாட்டப்பட்டவா்களை அடையாளம் காண போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தை நிறுவ முயற்சிகள் நடந்து வருகிறது. சம்பவம் நடத்த பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முழு சம்பவமும் சில உள்ளூா் மக்களால் பதிவு செய்யப்பட்டது. அங்கு நான்கு போ் இருவரையும் பல முறை கத்தியால் குத்துவதைக் கண்டுள்ளனா்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் விடியோவின் சிசிடிவி பதிவுகள் மற்றும் யதாா்த்தத்தை நாங்கள் சரிபாா்க்கிறோம். சம்பவத்திற்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்டவா்கள் இரண்டு பேரை கத்தியால் குத்திய பிறகு சுதந்திரமாக சுற்றித் திரிவதாகக் கூறி விடியோவை உருவாக்கியதையும் நாங்கள் அறிந்தோம். நாங்கள் பல போலீஸ் குழுக்களை அமைத்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவா்கள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com