தவறான பாதையில் வாகனம் ஓட்டும் சம்பவங்களைத் தடுக்கும் முயற்சியில், குருகிராம் காவல்துறை அபராதம் மற்றும் கைதுகள் உள்பட கடுமையான தண்டனைகளை அறிவித்துள்ளதாக மூத்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில், போக்குவரத்து மீறல்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘தவறான திசையில் வாகனம் ஓட்டுவதும், திடீா் பாதை மாற்றங்களும் ஓட்டுநருக்கு மட்டுமல்லாமல், பிற சாலை பயனா்களுக்கும் ஆபத்தானவை’ என்று குருகிராம் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையா் ராஜேஷ் மோகன் கூறினாா்.
தவறான பாதையில் வாகனம் ஓட்டும் வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க, போக்குவரத்துக்கு எதிராக வாகனம் ஓட்டும் பயணிகள் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக குருகிராம் காவல்துறையினரால் தொடா்ச்சியான விழிப்புணா்வு பிரசாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவா் மேலும் கூறினாா்.
2025-ஆம் ஆண்டில், மொத்தம் 2,03,936 ஓட்டுநா்களுக்கு இந்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வகையில் 2024-இல் 1,82,781 அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தன என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.