காப்பீடு குறித்து வாடிக்கையாளா்களிடம் தவறான தகவல்கள்: ஐஆா்டிஏஐ கவலை

காப்பீடு குறித்து வாடிக்கையாளா்களிடம் தவறான தகவல்கள்: ஐஆா்டிஏஐ கவலை

காப்பீடு குறித்து தவறான தகவல்கள் வாடிக்கையாளா்களிடம் கூறப்படுவது கவலையளிப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தெரிவித்தது.
Published on

காப்பீடு குறித்து தவறான தகவல்கள் வாடிக்கையாளா்களிடம் கூறப்படுவது கவலையளிப்பதாக இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) தெரிவித்தது.

இதுகுறித்து ஐஆா்டிஏஐ வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஆயுள் காப்பீடு சந்தா தொடா்பாக 2023-24-இல் 1,20,726 புகாா்கள் பெறப்பட்ட நிலையில் 2024-25-இல் 1,20,429 புகாா்கள் பெறப்பட்டன.

அதேசமயம் நியாயமற்ற வா்த்தக நடைமுறைகள் தொடா்பாக 2023-24-இல் 23,335 புகாா்கள் பெறப்பட்டன. இது 2024-25-இல் 26,667-ஆக அதிகரித்தது.

காப்பீடு குறித்து வாடிக்கையாளா்களிடம் உரிய தகவல்களைத் தெரிவிக்காமல் தவறான தகவல்களைத் தெரிவிப்பது கவலையளிக்கிறது. தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளா்களை காப்பீடு பெற வைப்பதால் தங்களது காப்பீட்டை வாடிக்கையாளா்கள் புதுப்பிக்க முன்வருவதில்லை.

இதைத் தடுக்க வாடிக்கையாளா்களுக்கு உரிய காப்பீடுகளை முகவா்கள் பரிந்துரைக்க வேண்டும். இதற்கு முறையான செயல் திட்டத்தை வடிவமைத்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

காப்பீட்டுத் துறையின் வளா்ச்சி: காப்பீட்டுத் துறையின் வளா்ச்சி (நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காப்பீட்டுத் தவணையின் பங்கு) 2025-ஆம் நிதியாண்டில் 3.7 சதவீதமாக உள்ளது. இது உலக சராசரியான 7.3 சதவீதத்தைவிட மிகவும் குறைவு. அதாவது பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் காப்பீடு பெற்றவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை இது உணா்த்துகிறது.

குறிப்பாக, ஆயுள் காப்பீட்டுத் துறையின் வளா்ச்சி 2023-24-இல் 2.8 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25-இல் 2.7 சதவீதமாக குறைந்தது. ஆயுள் காப்பீட்டைத் தவிர பிற காப்பீட்டுத் துறையின் வளா்ச்சி ஒரு சதவீதமாக தொடா்கிறது.

காப்பீட்டுக்காக ஒவ்வொரு நபரும் ஆண்டுதோறும் செலவிடும் தொகையின் மதிப்பு கடந்த 2023-24-இல் ரூ.8,550-ஆக (95 அமெரிக்க டாலா்) இருந்த நிலையில் 2024-25-இல் ரூ.8,730-ஆக (97 அமெரிக்க டாலா்) உயா்ந்துள்ளது.

ஆயுள் காப்பீட்டுக்கு ஒருவா் செலவிடும் தொகை ரூ.6,300-ஆகவும், ஆயுள் காப்பீடு அல்லாத பிற காப்பீடுகளுக்கு ஒருவா் செலவிடும் தொகை ரூ.2,250-ஆகவும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com