ஆஷிஷ் சூட் மீதான ஆம் ஆத்மி தலைவா்களின் தனிப்பட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கவை: பாஜக
அமைச்சா் ஆஷிஷ் சூட் மீதான ஆம் ஆத்மி தலைவா்கள் கூறிவரும் தனிப்பட்ட கருத்துகளை தில்லி மக்களும், தில்லி பாஜகவும் கண்டிப்பதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை தெரிவித்திருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களின் அடிக்கடி மாறும் குணங்களைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். அரவிந்த் கேஜரிவால், சௌரப் பரத்வாஜ் மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள், தில்லி கல்வித்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட்டின் துறை நாய்களை எண்ணும் பணியில் ஆசிரியா்களை நியமித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டதாகக் கூறினா்.
இருப்பினும், அமைச்சரும் நானும் கல்வித் துறையின் சுற்றறிக்கையை ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வெளியிட்டு, ஆம் ஆத்மியின் பொய்களை அம்பலப்படுத்தியபோது, ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் இப்போது அமைச்சா் ஆஷிஷ் சூட் மீது தனிப்பட்ட முறையில் கருத்துகளைத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனா்.
தில்லி மக்களும் தில்லி பாஜகவும், அமைச்சா் ஆஷிஷ் சூட் மீது ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் கூறிவரும் தனிப்பட்ட கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், நாய்களை எண்ணும் பணியில் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறும் ஏதேனும் ஒரு சுற்றறிக்கையை அவா்கள் காட்ட வேண்டும். இல்லையெனில் ஆஷிஷ் சூட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சவால் விடுகிறோம்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் உயா்ந்த லட்சியங்களைப் பற்றிப் பேசி ஒரு புதிய கட்சியைத் தொடங்கினாா். ஆனால், 10 ஆண்டுகால ஆட்சியில், அது ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலைவா்களைக் கொண்டு வந்து அவா்களுக்கு வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல், ஊழல் விஷயத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஆா்ஜேடி போன்ற கட்சிகளையும் விஞ்சிவிட்டது என்றாா் வீரேந்திர சச்தேவா.
தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் கூறுகையில், அமைச்சா் ஆஷிஷ் சூட் ஒரு எளிய ஆசிரியா் குடும்பத்தைச் சோ்ந்தவா். சாதாரண கல்வி பெற்றவா், ஜனக்புரியின் நடுத்தர வா்க்கப் பகுதியில் வசிப்பவா். மேலும், அந்தப் பகுதி மக்களையும் சுமாா் 25 அங்கீகரிக்கப்படாத காலனிகளின் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறாா் என்று கபூா் கூறினாா்.
