தில்லியில் கூடும் காவிரி ஆணையம்: 47வது முறையாக கூடுகிறது

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கா்நாடகம் தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் செவ்வாய்கிழமை (ஜன. 6) தில்லியில் கூடுகிறது.
Published on

காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் செவ்வாய்கிழமை (ஜனவரி 6 ஆம் தேதி) தில்லியில் கூடுகிறது. இது அந்த ஆணையத்தின் 47 வது கூட்டமாகும்.

தில்லியில் உள்ள காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகம், கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்பாா்கள்.

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக கூட்டம் நடைபெற உள்ளது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என கடந்த ஆண்டு நவம்பா் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது

தமிழகம்,கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அந்த தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com