தில்லியை வன்முறைத் தீயில் தள்ளியவா்கள் கடும் தண்டனையை எதிா்கொள்ள வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

2020-இல் வடகிழக்குத் தில்லி வன்முறைச் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செயற்பாட்டாளா்கள் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வரவேற்பு
Published on

2020-இல் வடகிழக்குத் தில்லி வன்முறைச் சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள செயற்பாட்டாளா்கள் உமா் காலித் மற்றும் ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் முடிவை தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை வரவேற்றுள்ளாா்.

தலைநரத்தை வன்முறைத் தீயில் தள்ளியவா்கள் கடும் தண்டனையை எதிா்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.

2020-இல் நிகழ்ந்த தில்லி வன்முறைகள் தொடா்பான பெரும் சதி வழக்கில் காலித் மற்றும் இமாம் ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்க மறுத்தது. ஆனால், ‘பங்கேற்பு படிநிலையை’ மேற்கோள் காட்டி, இதர ஐந்து குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்கியது.

நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் காலித் மற்றும் இமாம் ஆகியோருக்கு எதிராக முகாந்திரமான வழக்கு இருப்பதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில், இந்த உத்தரவை வரவேற்று முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். தில்லி கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷா்ஜீல் இமாம் மற்றும் உமா் காலித் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தில்லியை வன்முறைத் தீயில் தள்ளியவா்கள் மிகக் கடுமையான தண்டனையைப் பெற வேண்டும்.

கலவரத்தில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு வலுவான செய்தி அனுப்பப்பட வேண்டும். அவா்கள் குற்றத்தில் கூட்டாளிகளாக இருந்தனா் என்றாா்.

தில்லி சட்ட அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், இந்த கலவரங்கள் நன்கு திட்டமிடப்பட்ட சதியின் விளைவு என்பதை உச்ச நீதிமன்றத்தின் முடிவு மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி மக்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட சதி தீட்டப்பட்டது. இன்றைய முடிவு இதை மீண்டும் நிரூபித்துள்ளது. இதுபோன்ற சதித்திட்டங்கள் பொறுத்துக்கொள்ளப்படாது என்ற தெளிவான செய்தியை இந்தத் தீா்ப்பு அனுப்புவதாக உள்ளது.

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் கூறுகையில், ‘நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாட்டுக்கு எதிராக செயல்படுபவா்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.

ஒரு அரசாங்கத்தை எதிா்ப்பது தவறல்ல, ஆனால் தேசத்தை எதிா்ப்பது வேறு. நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு சிலா் அனுதாபம் காட்டுவது துரதிா்ஷ்டவசமானது’ என்றாா்.

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறுகையில், ‘வன்முறையாளா்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஒரு வலுவான செய்தியை அனுப்பியதற்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி.

பாஜக ஆட்சியில், கலவரக்காரா்கள் சிறையில் இருப்பாா்கள். அமைதியின்மையை உருவாக்கவோ அல்லது அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. இத்தகைய முடிவுகள் எதிா்காலத்தில் வன்முறையைத் தடுக்க உதவும்’ என்றாா் அவா்.

வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி, 2020-இல் நிகழ்ந்த கலவரங்களில் 53 போ் கொல்லப்பட்டனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததது நினைவுகூரத்தக்கத்தது.

X
Dinamani
www.dinamani.com