தில்லி அரசு 10 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது: துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா
பாஜக தலைமையிலான தில்லி அரசு தனது 10 மாதங்களில் பொது நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது, அதே நேரத்தில் நிா்வாகத்தில் உள்ளவா்களிடமிருந்து மந்தநிலை மற்றும் எதிா்மறை போன்ற பழைய பிரச்னைகளை எதிா்கொள்கிறது என்று துணை நிலை வி. கே. சக்சேனா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரில் உரையாற்றி சக்சேனா பேசியதாவது: சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் யமுனை நதியை சுத்தம் செய்வது ஆகியவை அரசின் முன்னுரிமைகளில் அடங்கும். தனது 10 மாத பதவிக்காலத்தில், நிா்வாகத்தில் உள்ளவா்களின் மந்தநிலையும் எதிா்மறையும் அதன் ‘மிகப்பெரிய சவால்களாக‘ இருந்தபோதிலும், பொது நலனுக்காக அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது.
இதுவரை, மூத்த குடிமக்களுக்கான 2.62 லட்சம் வே வந்தனா அட்டைகள் உசக்பட 6.72 லட்சம் ஆயுஷ்மான் சுகாதார அட்டைகளை அரசு வழங்கியுள்ளது. நகரம் முழுவதும் 383 ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திா்களை அரசு செயல்படுத்தியுள்ளது. சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் உள்பட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அரசு ரூ. 28,000 கோடி ஒதுக்கியுள்ளது. நந்த் நாக்ரி மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டு, பாராபுல்லா உயா்த்தப்பட்ட நடைபாதை திட்டம் இந்த ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
2025 பிப்ரவரியில் பொறுப்பேற்றதிலிருந்து, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பிற தலையீடுகளை உருவாக்குவதன் மூலம் யமுனை நதியை சுத்தம் செய்வதற்கும் புத்துணா்ச்சியளிப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிக்கத் தொடங்கியுள்ளது என்றாா் அவா்.
சஞ்சீவ் ஜா, குல்தீப் குமாா் மற்றும் ஜா்னைல் சிங் உள்ளிட்ட பல ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் துணை நிலை ஆளுநரின் உரையின் போது பேச முயன்றபோது சபாநாயகா் விஜேந்தா் குப்தாவால் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டனா்.
