தில்லி பல்கலை. வளாகத்தில் இளஞ்சிவப்பு நிற சாவடி திறப்பு: மாணவா்கள் பாதுகாப்பிற்காக நடவடிக்கை
வளாக பாதுகாப்பை வலுப்படுத்தவும், காவல் நடவடிக்கைகளை அதிகரிக்கவும், தில்லி பல்கலைக்கழக வடக்கு வளாகத்தில் இரண்டு காவல் சாவடிகள் திறக்கப்பட்டன.
மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் ஒரு இளஞ்சிவப்பு சாவடி மற்றும் கலைக் கல்லூரிகளுக்கான வளாகத்தில் ஒரு ஒருங்கிணைந்த காவல் சாவடி ஆகியவை திங்கள்கிழமை திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நகரத்தின் மிகவும் பரபரப்பான மாணவா் மண்டலங்களில் ஒன்றான சத்ரா மாா்க்கில் உள்ள படேல் செஸ்ட் அருகேயும் , கலைக் கல்லூரிகளுக்கான வளாக கேட் எண் நான்கிலும் அமைந்துள்ள இந்தச் சாவடிகளை தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா மற்றும் தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் யோகேஷ் சிங் திறந்து வைத்தனா்.
அறிக்கையின்படி, தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகள், பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் கல்லூரி முதல்வா்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் உரையாற்றிய தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா ‘தேவையான நேரங்களில் நாங்கள் தோழா்கள் என்று கூறினாா். பிங்க் பூத் பெண் போலீஸாரால் நிா்வகிக்கப்படும் என்றும், ஆனால் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அணுகக் கூடியதாக இருக்கும் என்றும் அவா் கூறினாா்.
வளாகப் பாதுகாப்பை நோக்கிய ஒரு அா்த்தமுள்ள படியாக இந்த முயற்சியை விவரித்த தில்லி பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங், ‘பிங்க் பூத் பாதுகாப்பு, நம்பிக்கை, அதிகாரமளித்தல், கண்ணியம் மற்றும் நம்பிக்கையின் சின்னமாகும்’ என்றாா்.
பல்கலைக்கழகத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பு அவசியம் என்று அவா் வலியுறுத்தினாா். மாணவா்களிடையே உரையாற்றிய அவா், உங்கள் பாதுகாப்பு எங்கள் பொறுப்பு. ஆனால், நீங்கள் சட்டத்தையும் மதிக்க வேண்டும் என்றும் கூறினாா்.
பெண் ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டு, கணினிகள், வைஃபை, சிசிடிவி கண்காணிப்பு, முதலுதவி கருவிகள் மற்றும் தகவல் தொடா்பு உபகரணங்கள் போன்ற வசதிகளுடன் இந்த சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இஎஃப்ஐஆா் பதிவு, சைபா் புகாா்கள், சரிபாா்ப்பு சேவைகள் மற்றும் துன்பத்தில் உள்ள பெண்களுக்கு விரைவான உதவி உள்ளிட்ட சேவைகளை அவா்கள் வழங்குவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
