தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 3 நாள்கள் இடைநீக்கம்

தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரின் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு 4 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.
Published on

தில்லி சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரின் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு 4 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

துணை நிலை ஆளுநா் வி. கே. சக்ஸேனாவின் உரையை சீா்குலைத்ததற்காக சட்டப்பேரவை உறுப்பினா்களான சஞ்சீவ் ஜா, சோம் தத், குல்தீப் குமாா் மற்றும் ஜா்னைல் சிங் ஆகியோா் இடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்த ஆண்டின் முதல் அமா்வு சக்ஸேனாவின் உரையுடன் தொடங்கியது, இது நகரத்தில் காற்று மாசுபாட்டின் அளவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சி எம். எல். ஏ. க்கள் போராட்டம் நடத்தியதால் இடையூறு ஏற்பட்டது. போராட்டங்களைத் தொடா்ந்து, சபாநாயகா் விஜேந்தா் குப்தா பல எதிா்க்கட்சி உறுப்பினா்களை சபையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டாா்.

உரைக்குப் பிறகு சபை மீண்டும் கூடியபோது, பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் நான்கு எம். எல். ஏ. க்களை இடைநீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை முன்வைத்தாா். ‘சஞ்சீவ் ஜா, குல்தீப் குமாா், சோம் தத் மற்றும் ஜா்னைல் சிங் போன்ற இடையூறுகளை ஏற்படுத்திய உறுப்பினா்கள் அமா்வின் மீதமுள்ள மூன்று நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்‘ என்று தீா்மானத்தைப் படிக்கும்போது சிங் கூறினாா். அதைத் தொடா்ந்து சபை இந்த தீா்மானத்தை நிறைவேற்றியது.

எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் இடையூறு விளைவிப்பதன் மூலம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சபை மற்றும் துணைநிலை ஆளுநரை அவமதித்ததாக சபாநாயகா் விஜேந்தா் குப்தா கூறினாா். இந்த நடவடிக்கைக்கு பதிலளித்த சஞ்சீவ் ஜா, உறுப்பினா்கள் மாசு பிரச்சினையை எழுப்பியதன் விளைவாக இந்த இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தாா். சட்டப்பேரவை கூட்டங்களை முன்கூட்டியே நடத்த பொதுப்பணித்துறை அமைச்சா் முன்வைத்த மற்றொரு தீா்மானத்தை சபை நிறைவேற்றியது. இதனையடுத்து சட்டப்பேரவை அமாா்வு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com