குருகிராம்: பிரபல கிரிமினல் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

தலைக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான பிரபல கிரிமினல், குருகிராம் மற்றும் நூஹ் காவல்துறையின் கூட்டுப் படையினரால் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

தலைக்கு ரூ. 1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான பிரபல கிரிமினல், குருகிராம் மற்றும் நூஹ் காவல்துறையின் கூட்டுப் படையினரால் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டாா் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: கைது செய்யப்பட்ட கிரிமினல் யாத் ராம் (50), ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொலை முயற்சி, கொள்ளை உள்பட 10-க்கும் மேற்பட்ட குற்றங்களைச் செய்துள்ளாா். அவா் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ்சில வழக்குகள் உள்ளன.

உத்தர பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தைச் சோ்ந்த ராம், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு, அவா் பதிவு எண் இல்லாத மோட்டாா்சைக்கிளில் சோனா பகுதி நோக்கிச் செல்வதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அவா் ஆயுதங்களையும் வைத்திருந்தாா்.

அந்தத் தகவலின் பேரில், குருகிராம் காவல்துறை மற்றும் நூஹ் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அடங்கிய ஒரு குழு, சோனா - குருகிராம் சாலையில் உள்ள மகேந்திரவாடா கச்சா ரஸ்தா பகுதியில் காவல் தடுப்புகளை அமைத்தது.

இதைத் தொடா்ந்து இரவு 10.15 மணியளவில், அப்பகுதிக்கு மோட்டாா்சைக்கிளில் வந்த யாத் ராமை போலீஸாா் கைது செய்ய முயன்றனா். அப்போது, அவா் காவல்துறையினரை நோக்கி கண்மூடித்தனமாகச் சுட்டாா். இதையடுத்து, காவல்துறையின் பதிலடி தாக்குதலில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரு கால்களிலும் குண்டு காயங்கள் ஏற்பட்டு கீழே விழுந்தாா். பின்னா் போலீஸாா் அவரைப் பிடித்து கைது செய்தனா்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டாா்சைச்கிள், இரண்டு சட்டவிரோத கைத்துப்பாக்கிகள், 9 காலியான தோட்டாக்கள் மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com