ஹரியாணா பாஜக அரசு அதிக அம்மோனியா கலந்த நீரை தில்லிக்கு திறந்துவிட்டது: சௌரப் பரத்வாஜ்

தில்லி தோ்தலுக்கு முன்னா், ஹரியாணாவில் இருந்து பாஜக அரசு அதிக அம்மோனியா கலந்த, நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை தில்லிக்கு அனுப்பியது எனினும், அரவிந்த் கேஜரிவால் கடும் ஆட்சேபனைகளைத் தெரிவித்த பின்னரே அது குறைக்கப்பட்டது என்று தில்லி ஆம் ஆத்மி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறினாா்.
Published on

தில்லி தோ்தலுக்கு முன்னா், ஹரியாணாவில் இருந்து பாஜக அரசு அதிக அம்மோனியா கலந்த, நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரை தில்லிக்கு அனுப்பியது எனினும், அரவிந்த் கேஜரிவால் கடும் ஆட்சேபனைகளைத் தெரிவித்த பின்னரே அது குறைக்கப்பட்டது என்று தில்லி ஆம் ஆத்மி பிரிவு தலைவா் சௌரப் பரத்வாஜ் கூறினாா்.

இது தொடா்பாக செளரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: ‘தி எனா்ஜி அண்ட் ரிசோா்சஸ் இன்ஸ்டிடியூட்’ (தெரி) வெளியிட்டுள்ள ஒரு புதிய தகவல், தில்லியின் தண்ணீா் சா்ச்சை குறித்த அரசியல் ரீதியாக பதற்றத்தையும், மிகவும் கவலைக்குரிய ஒரு அத்தியாயத்தை மீண்டும் திறந்துள்ளது.

தேசிய தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி அரசின் பதவிக் காலத்தில், பாஜக ஆளும் ஹரியாணாவிலிருந்து யமுனை ஆற்றில் அதிக அம்மோனியா கலந்த நீா் திறந்துவிடப்பட்டதை இது சுட்டிக்காட்டுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தில்லியில் மக்களின் உயிரைப் பணயம் வைக்க பாஜக தயாராக இருந்ததா?. தோ்தலுக்கு முன்னதாக நச்சு நீா் விநியோகம் மூலம் இந்தூா் போன்ற ஒரு சோகம் திட்டமிடப்பட்டிருந்ததா?.

அம்மோனியா அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை அரவிந்த் கேஜரிவால் சுட்டிக்காட்டி கடுமையாகப் போராடியபோது, ஹரியாணா அரசு அந்த அளவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது.

அதே நேரத்தில், தில்லி ஜல் போா்டு (டிஜேபி) மற்றும் துணைநிலை ஆளுநா் அலுவலகம் இந்த எச்சரிக்கைகளைத் தவறானவை என்று நிராகரித்தன.

மேலும், கேஜரிவால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இப்போது தெரியின் கண்டுபிடிப்புகள், அம்மோனியா அளவுகள் குறைத்துக் காட்டப்பட்டதாகவும், ஹரியாணா அரசாங்கத்தைப் பாதுகாக்க தில்லி மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும் கூறுகின்றன.

இது அரசியல் கூட்டுச்சதி, பொறுப்புக்கூறல் மற்றும் தில்லியின் நீா் வேண்டுமென்றே ஆபத்தானதாக மாற்றப்பட்டதா என்பது குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்றாா் அவா்.

திங்கள்கிழமை ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் ஒரு காணொளியைப் பகிா்ந்த சௌரப் பரத்வாஜ், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், அரசாங்கத்தால் விநியோகிக்கப்பட்ட தண்ணீரைக் குடித்த பிறகு சுமாா் 10 போ் இறந்துவிட்டனா்.

நூற்றுக்கணக்கானோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா், பலா் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தில்லியில் இது ஒருபோதும் நடக்கவில்லை. ஏனெனில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மக்களுக்காகப் போராட எப்போதும் தயாராக இருந்தாா் என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com