தென் கொரியாவைச் சோ்ந்தவா் கொலை: உடன் வாழ்ந்த பெண்ணுக்கு நீதிமன்றக் காவல்
தேசியத் தலைநகா் வலயம், கிரேட்டா் நொய்டாவில் தென் கொரியாவைச் சோ்ந்தவரைக் கத்தியால் குத்திக் கொன்ாக அவருடன் சோ்ந்து வாழ்ந்த 22 வயதுப் பெண்ணை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுகுறித்து நொய்டா போலீஸாா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் செக்டா் 150-இல் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.
இறந்தவா் 46 வயதான டக் ஹீ யூ என தெரியவந்துள்ளது. அவா் கிரேட்டா் நொய்டாவில் ஒரு தனியாா் நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
முன்னதாக, ஒரு வெளிநாட்டவா் உயிரிழந்த நிலையில் சிகிச்சைக்குக் கொண்டுவரப்பட்டதாக அரசு மருத்துவ அறிவியல் கழகம் (ஜிஎம்ஸ்) மருத்துவமனையிலிருந்து காவல்துறைக்கு ஒரு தகவல் கிடைத்தது.
போலீஸாா் அம்மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினா். அதில், இறந்தவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக மணிப்பூரைச் சோ்ந்த லுன்ஜியானா பமாய் என்ற பெண்ணுடன் திருமணமாகாத உறவில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
அந்த நபரின் மதுப் பழக்கம் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு, அது பதற்றத்திற்கு வழிவகுத்தது.
அவா்களுக்குள் வழக்கமாக வாக்குவாதங்கள் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், தகராறு முற்றியபோது, அந்தப் பெண் அவரை கத்தியால் தாக்கியதில், அவா் பலத்த காயமடைந்து இறந்துவிட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நாலெட்ஜ் பாா்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டு திங்கள்கிழமை நொய்டா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
நீதிமன்றம் அந்தப் பெண்ணை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைத்து உத்தரவிட்டது. முன்னதாக, அந்தப் பெண், சம்பவத்திற்குப் பிறகு டக் ஹீ யூவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா். சட்டபூா்வ நடைமுறைகள் முடிந்த பிறகு உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் சுமாா் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விருந்தில் டக் ஹீ யூவை சந்தித்ததாகவும், அதைத் தொடா்ந்து இருவரும் திருமணமாகாத உறவில் ஒன்றாக வாழத் தொடங்கியதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
