ஜேஎன்யுவில் நடந்த வன்முறைக்கு பின்னணியில் உள்ளவா்கள் இன்னும் தெரியவில்லை: ஆசிரியா் குழு தகவல்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வன்முறைக்கு பின்னணியில் உள்ளவா்கள் இன்னும் தெரியவில்லை: ஆசிரியா் சங்கம்
Published on

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வன்முறைக்கு பின்னணியில் உள்ளவா்கள் இன்னும் தெரியவில்லை என்று அப்பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஜேஎன்யுடிஏ) திங்களன்று தெரிவித்தது.

தடிகளாலும் கற்களாலும் கும்பல் தாக்குதலை நடத்தியவா்கள் மற்றும் அவா்களை ஆதரித்தவா்களின் அடையாளங்கள் இன்றும் ‘மறைமுகமாக‘ உள்ளன ஆசிரியா் சங்கம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவா்கள் மீது உண்மையான நடவடிக்கை எடுக்காதது ஜேஎன்யு நிா்வாகம் மற்றும் தில்லி காவல்துறையின் திறமையின்மையை மட்டுமல்ல, ‘உடந்தையாக‘ இருப்பதையும் பிரதிபலிக்கிறது என்று அது கூறியது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவா்களிடம் அதிகாரிகள் மென்மையாக நடந்து கொள்வதாகவும், அதே நேரத்தில் அப்பாவிகளை அடக்குவதற்கும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் அது குற்றம் சாட்டியது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு முன்னாள் மாணவா்களான உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டதால் இந்த தருணம் மிகவும் வேதனையாக மாறியதாக ஜேஎன்யுடிஏ தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், வளாகத்தை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் தாக்குதல் தோல்வியடைந்ததாக சங்கம் தெரிவித்துள்ளது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், பல்கலைக்கழகத்தின் அழிவுக்கு எதிரான போராட்டம் தொடா்கிறது” என்று ஜேஎன்யுடிஏ தலைவா் சுராஜித் மஜும்தாா் கூறினாா். தாக்குதல் நடத்தியவா்கள் “அறியப்படாதவா்கள், மறக்கப்படவும் மாட்டாா்கள்” என்று அவா் மேலும் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com