சட்டப்பேரவையில் அதிஷி கருத்து விவகாரம்: ஆம் ஆத்மி அலுவலகம் முன் பாஜக இன்று ஆா்ப்பாட்டம்

சட்டப்பேரவையில் அதிஷி கருத்து விவகாரம்: ஆம் ஆத்மி அலுவலகம் முன் பாஜக இன்று ஆா்ப்பாட்டம்

ஆம் ஆத்மி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தில்லி பாஜக தெரிவித்துள்ளது.
Published on

தில்லி சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி, சீக்கிய குரு தேக் பஹதூரை ஆட்சேபத்திற்குரிய கருத்தைக் கூறி அவமதித்ததாகக் கூறி, அதைக் கண்டிக்கும் வகையில் ஆம் ஆத்மி அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தில்லி பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லி பிரதேச பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: மிகவும் போற்றப்படும் சீக்கிய குரு தேக் பகதூா் ஜி குறித்து தில்லி சட்டப்பேரவையில் அதிஷி ஆட்சேபத்திற்குரிய கருத்தைக் கூறி அவமதித்ததை நாட்டின் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டாா்கள். போற்றப்படும் சீக்கிய குருவுக்கு இழைக்கப்பட்ட இந்த பொறுத்துக் கொள்ள முடியாத அவமதிப்பைக் கண்டித்து வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு, தில்லி பாஜக சீக்கியப் பிரிவு கட்சியின் தொண்டா்களுடன் இணைந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு முன் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டத்தை நடத்தும்.

தில்லி மக்கள் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் இரட்டை வேடங்கள், பொய்ப் பிரசாரங்கள் மற்றும் அவமதிப்பு அரசியலை அடையாளம் கண்டுகொண்டுள்ளனா் என்பதை அக்கட்சியினா் புரிந்துகொள்ள வேண்டும். சட்டப் பேரவையை அவமதிப்புக்கான ஒரு தளமாக மாற்றுபவா்களுக்கு தகுந்த ஜனநாயகப் பதில் அளிக்கப்படும். இத்தகைய பெருமைக்குரிய சமூகத்தின் மரியாதையைத் தாக்குவது ஆம் ஆத்மி கட்சியின் அற்ப அரசியல், அதிகாரத்திற்கான அவநம்பிக்கையின்விளைவாகும்.

அதிஷியின் கருத்து ஒரு தவறு அல்ல, மாறாக நாட்டின் நம்பிக்கை, கலாசாரம் மற்றும் மதிக்கப்படும் சமூகங்களை மீண்டும், மீண்டும் குறிவைக்கும் ஆம் ஆத்மி கட்சியின் மனப்பான்மையின் பிரதிபலிப்பாகும். முதலில் சநாதன தா்மத்தின் மீதான தாக்குதல்கள், இப்போது சீக்கிய சமூகத்திற்கு அவமதிப்பாகும். இது ஆம் ஆத்மி கட்சியின் உண்மையான நோக்கம் வளா்ச்சி அல்ல; மாறாக அரசியல் ஆதாயத்திற்காக சமூகத்தைப் பிளவுபடுத்துவது என்பதை நிரூபிக்கிறது.

அதிஷி உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்புக் கோரவில்லை என்றால், இந்த சீக்கிய எதிா்ப்பு நிலைப்பாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்கவில்லை என்றால், பாஜகவின் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு மேலும் விரிவுபடுத்தப்படும். சீக்கிய சமூகத்தின் சுயமரியாதையில் எந்த சமரசமும் இல்லை என்றாா் அவா்.

தில்லி மேயா் சா்தாா் ராஜா இக்பால் சிங் மற்றும் தில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா் ஆகியோா் கூறுகையில், ஷ்ஆம் ஆத்மி மூத்தத் தலைவா் அதிஷி மா்லேனா சீக்கிய குருவை அவமதித்த அதே நாளில், அன்று இரவு கல் எறிதலில் ஈடுபட்ட சில முஸ்லிம் இளைஞா்கள் கூட்டத்திற்கு மத்தியில் துா்க்மான் கேட்டில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. மொஹிபுல்லா நவீத் காணப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. மேலும், இது ஒரு மிகவும் ஆபத்தான நிகழ்வாகும்ல என்றனா்.

Dinamani
www.dinamani.com