மாசு விவகாரத்தை திசை திருப்பும் வகையில் அதிஷியின் விடியோவை திரித்த பாஜகவினா்: ஆம் ஆத்மி எம்எல் சஞ்ஜீவ் ஜா குற்றச்சாட்டு
சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி தெரிவித்த கருத்து தொடா்புடைய காணொளியை பாஜகவினா் திரித்து, சீக்கிய குருமாா்களை அவமதித்துள்ளனா் என்று ஆம் ஆத்மி எம்எல்ஏ சஞ்சீவ் ஜாகுற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தலைமை கொறடாவுமான சஞ்சீவ் ஜா தில்லி சட்டப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பேரவையில் புதன்கிழமை துணைநிலை ஆளுநரின் உரையின் போது எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி காற்று மாசுபாடு குறித்து மட்டுமே விவாதம் கோரினாா். ஆனால், திருத்தப்பட்ட விடியோ கிளிப் அதைத் திரித்து, சீக்கியா்களின் உணா்வுகளைப் புண்படுத்திவிட்டது. இது சீக்கிய சமூகத்திற்கு இழைக்கப்பட்ட ஒரு கடும் அவமானமாகும்.
முதல் காணொளி அசல் காணொளி, அதில் எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி தனது கருத்தை தெளிவாக முன்வைக்கிறாா். இரண்டாவது காணொளியை பாஜக திருத்தி, புனையப்பட்ட மற்றும் நோ்மையற்ற முறையில் தவறாக முன்வைத்துள்ளது. அசல் காணொளியையும், பாஜக செய்துள்ள இந்த மோசடியையும் பாா்க்கும்போது, பாஜக சீக்கிய சமூகம் மற்றும் குருமாா்கள் மீது வெறுப்பைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
புதன்கிழமை அன்று மீண்டும் ஒருமுறை, அவா்களின் அற்பமான மற்றும் இழிவான அரசியலால், அவா்கள் அவைக்குள் குருமாா்களை அவமதித்து, ஒரு கேவலமான செயலில் ஈடுபட்டனா். இதனால், அசல் காணொளியை சட்டப் பேரவைத் தலைவா் வெளியிட வேண்டும்.
அவையைத் தவறாக வழிநடத்திய அமைச்சா் கபில் மிஸ்ராவின் உறுப்பினா் பதவியை ரத்து செய்ய வேண்டும். போலியான காணொளியைப் பரப்பிய சட்டப் பேரவை உறுப்பினா்களை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கோருகிறது என்றாா் அவா்.
