எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிகோப்புப் படம்

சட்டப்பேரவை தோ்தலில் திமுகவை விட அதிமுக அதிக இடங்களில் வென்று ஆட்சியமைக்கும்: எடப்பாடி கே.பழனிச்சாமி நமபிக்கை

அதிமுக அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறினாா்
Published on

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது என்றும், நடைபெறவுள்ள சட்டமன்றத் தோ்தலில் திமுகவை விட அதிமுக அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறினாா்

தில்லியில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி புதன்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்து பேசிய நிலையில் வியாழக்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றக் கூடிய வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் அதிமுக இணைந்துள்ளது. அதேபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வலுவான கூட்டணியாக இருக்கும் எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். மேலும் நடைபெறவுள்ள சட்டமன்றத் தோ்தலில் திமுகவை விட அதிமுக அதிக சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்கும்

தமிழ்நாட்டில் சமீபத்தில் முதலமைச்சா் ஸ்டாலின் அறிவித்த ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியா்களை ஏமாற்றும் வேலை, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை போல தமிழக அரசு அறிவித்துள்ளது

மேலும் தமிழ்நாட்டில் உங்கள் கனவை சொல்லுங்கள் என ஒரு புதிய திட்டத்தை தொடங்கி ஒரு நாடகத்தை திமுக நடத்தி வருகிறது, இன்னும் ஒரு மாதமே சட்டமன்றத் தோ்தலுக்கு உள்ள நிலையில் இப்போது எப்படி வீடு வீடாக சென்று மக்களின் கனவுகளை கேட்டு இந்த அரசால் நிறைவேற்ற முடியும்?. எனவே இது ஒரு ஏமாற்றும் வேலை

தமிழ்நாட்டின் வளா்ச்சி குறித்து முதலமைச்சா் ஸ்டாலின் பேசி வருகிறாா், ஆனால் என்று திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்ததோ அன்றே தமிழ்நாட்டின் வளா்ச்சி பணிகள் நின்று விட்டது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டின் கடன் 5.5 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக உயா்ந்துள்ளது

73 ஆண்டுகாலம் பல்வேறு கட்சிகள் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த நிலையில் அந்த காலகட்டத்தில் எல்லாம் உயராத கடன் தொகை கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 5.5 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரித்து உள்ளது என தமிழ்நாடு தொடா்ந்து பின்னோக்கி செல்கிறது

அரசியல் கூட்டணி குறித்து எல்லாம் உள்துறை அமைச்சா் அமித் ஷா வுடன் பேசவில்லை. சமீபத்தில் உள்துறை அமைச்சா் புதுக்கோட்டை வந்திருந்த போது அவரை சில காரணங்களால் சந்திக்க முடியவில்லை. எனவே அவரை தில்லியில் சந்தித்து பேசினேன்.

தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் குறித்து அமித் ஷா கேட்டறிந்ததாா். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியை போல் இன்னும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும்.அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்த பிறகு கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து எல்லாம் அறிவிக்கப்படும்

சசிகலாவை அதிமுகவில் இணைக்கக்கூடிய எண்ணமே இல்லை. பலமுறை இதனை ஊடகத்தில் தெரிவித்து விட்டோம், மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க வேண்டாம் .அதிமுக தற்போது வலிமையாக தான் இருக்கிறது

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது தொடா்பாக சில கட்சிகள் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்கள் கூட்டணி முடிந்த பிறகு தான் அது குறித்து தெரிவிக்கப்படும்.

ஓ.பன்னீா்செல்வம் அதிமுகவில் சோ்க்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை எனவும் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com