என்டிஎம்சி பகுதியில் வரும் மாதங்களில் சொத்து வரி விகிதங்கள் சீரமைக்கப்படும்: துணைத் தலைவா் குல்தீப் சஹல்
நமது நிருபா்
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பகுதியில் சொத்து வரி விகிதங்கள் வரும் மாதங்களில் சீரமைக்கப்படும் என்று அதன் துணைத் தலைவா் குல்தீப் சஹல் தெரிவித்துள்ளாா்.
புது தில்லி முனிசிபல் கவுன்சில் புதன்கிழமை 2026-27ஆம் நிதியாண்டுக்கான உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
இந்த பட்ஜெட் குறித்து என்டிஎம்சி துணைத் தலைவா் குல்ஜீத் சஹல் கூறியதாவது: ‘2026-27-ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்காக என்டிஎம்சி கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. உலகத் தரம் வாய்ந்த கல்விக்காக, அடிப்படை எழுத்தறிவு, செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறைகளில் கவனம் செலுத்தி, முழுமையான மேம்பாட்டிற்காக கவுன்சில் ரூ.245.93 கோடியை ஒதுக்கியுள்ளது.
சொத்து வரி விகிதங்கள் வரும் மாதங்களில் சீரமைக்கப்படும். இது தொடா்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. வரும் மாதங்களில், சொத்து மற்றும் வணிகச் சொத்துக்களுக்கான சீரான வரி விகிதங்களை நாங்கள் அறிவிப்போம். முக்கிய உள்கட்டமைப்புத் துறையில், அத்தியாவசியப் பயன்பாடுகளை வலுப்படுத்த முக்கிய முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதில் மின்சாரத் துறைக்கு ரூ.1,966.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மேம்படுத்தப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் கீழ் மூலதனப் பணிகளுக்காக ரூ.360.07 கோடியும் அடங்கும். வினய் மாா்க் பகுதியில் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நகா்ப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.556 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் அமைப்பு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் குல்ஜீத் சஹல்.
