குரு தேக் பகுதூரை அவமானப்படுத்தியதற்கு அதிஷி மன்னிப்பு கேட்க பாஜக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

Published on

நமது நிருபா்

சீக்கிய குரு தேக் பகதூரை அவமதித்ததாக குற்றம் சாட்டி எதிா்க்கட்சித் தலைவா் அதிஷிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்கள் கோஷங்களை எழுப்பியதை அடுத்து புதன்கிழமை தில்லி சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

சபாநாயகா் விஜேந்தா் குப்தா இரண்டு முறை சபையை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனெனில் ஆளும் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதாகைகளை ஏந்தியபடி ஆம் ஆத்மி தலைவா்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா். அதிஷியின் அறிக்கை தன்னிடம் இருப்பதாகக் கூறிய விஜேந்தா் குப்தா, அமா்வில் சோ்ந்து தனது கருத்துக்களை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினாா். அவா் கூறியது கண்டிக்கத்தக்கது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தாா்.

எதிா்கட்சி தலைவா் அதிஷி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அமைச்சா்கள் மஞ்சிந்தா் சிங் சிா்சா, ஆஷிஷ் சூட் மற்றும் கபில் மிஸ்ரா உள்ளிட்ட பல ஆளும் கட்சி உறுப்பினா்கள் அதிஷி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினா்.

கடந்த ஆண்டு நவம்பரில் குரு தேக் பகதூரின் 350 வது தியாக ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லி அரசு நடத்திய நிகழ்ச்சி குறித்த சிறப்பு விவாதத்திற்குப் பிறகு எதிா்க்கட்சித் தலைவா் குரு தேக் பகதூருக்கு எதிராக சா்சைக்குறிய கருத்தை ஒன்றைச் சொன்னாா் என்று சிா்சா கூறினாா்.

இரண்டாவது ஒத்திவைப்புக்குப் பிறகு சபை மீண்டும் கூடியபோது, எதிா்க்கட்சி ஆம் ஆத்மி எம். எல். ஏ முகேஷ் அஹ்லாவத், அதிஷி கோவாவில் இருப்பதாகத் தெரிவித்ததாக சபாநாயகா் கூறினாா், அங்கு அவா் ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளராக இருந்தாா். பாஜக எம்எல்ஏக்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு வலியுறுத்தி சபையை ஒழுங்குபடுத்த குப்தா முயன்றாா், ஆனால் ஆளும் கட்சி எம்எல்ஏக்களின் போராட்டம் தொடா்ந்தது. பின்னா் அவா் சபையை வியாழக்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைத்தாா்.

Dinamani
www.dinamani.com